கோவை அருகே காட்டுப்பகுதியில் இளம்பெண் அரை நிர்வாண நிலையில் சடலமாக மீட்பு..!

 
1

கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள மஞ்சுப்பள்ளம் காட்டுப்பகுதியில், இளம்பெண் ஒருவரின் சடலம் அரை நிர்வாண நிலையில் புதருக்குள் கிடப்பதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே கோவை மாநகர தெற்கு துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டனர். சடலம் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால், உடலில் வெளிப்படையான காயங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதை உடனடியாக கண்டறிய முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து மோப்பநாய் மற்றும் தடயவியல் மற்றும் கைவிரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. மோப்பநாய் அங்கிருந்து சிறிது தூரம் ஓடிவிட்டு யாரையும் கவ்விப் பிடிக்காமல் மீண்டும் திரும்பியது. கைவிரல் ரேகை நிபுணர்கள் அந்த பெண்ணின் உடலில் ஏதேனும் தடயங்கள் சிக்க வாய்ப்புள்ளதா என்று ஆய்வு செய்தனர். பின்னர், உடற்கூறாய்வுக்காக சடலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் நடந்த பகுதி மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால், இந்த வழக்கு மதுக்கரை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். உயிரிழந்த பெண்ணிற்கு சுமார் 25 வயது இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பெண்ணின் ஒரு கையில் ‘ஜெகன்’ என்ற பெயரும் அதன் அருகே இதய வடிவமும் பச்சை குத்தப்பட்டுள்ளது. மற்றொரு கையில் ‘எஸ்’, ‘ஜெ’ ஆகிய ஆங்கில எழுத்துக்களும் பச்சை குத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இளம்பெண்ணின் சடலம் அரை நிர்வாண நிலையில் மீட்கப்பட்டதால், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு காட்டில் வீசப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற முழு விவரமும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.