சென்னை மெட்ரோவில் பெண்களைக் கொச்சைப்படுத்தும் விளம்பரம் : கொதித்த எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்!
சென்னை மெட்ரோ இரயிலுக்குள் இடம்பெற்றுள்ள ஒரு விளம்பரம் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், அவர்களை ஒரு பொருளாகச் சித்தரிக்கும் வகையிலும் குறிப்பிடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மெட்ரோ ரயில் பெட்டி ஒன்றின் உள்ளே காணப்பட்ட விளம்பரச் சுவரொட்டி ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழச்சி தங்கபாண்டியண் தனது எக்ஸ் தளத்தில், “சென்னை மெட்ரோ இரயிலுக்குள் இடம்பெற்றுள்ள ஒரு விளம்பரம் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், அவர்களை ஒரு பொருளாகச் சித்தரிக்கும் வகையிலும் குறிப்பிடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பொது இடங்களில் பெண்களின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு விளம்பரங்கள் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.இத்தகைய விளம்பரத்தை சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் எவ்வாறு அனுமதித்தது என்பது கேள்விக்குரியது. இந்த விளம்பரத்தை உடனடியாக அகற்றி, இதுபோன்ற விளம்பரங்கள் இனி இடம்பெறாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த விளம்பரத்தை வெளியிட்ட நிறுவனம், திருவள்ளுவர் போக்குவரத்துக் கழக ஊழியர் கூட்டுறவுக் கடன் சங்கம் லிமிடெட் (TTCECS). அதில், மக்கள் தங்கள் நிலையான வைப்புத்தொகைக்கு (fixed deposit) சிறந்த வட்டி விகிதங்களைப் பெறலாம் என்றும், ஆனால் "ஒரு காதலி 0 சதவீத வட்டி தருவார்" என்றும் கூறப்பட்டிருந்தது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் சென்னை மெட்ரோவைப் பயன்படுத்துவதாகவும், இதுபோன்ற விளம்பரம் பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தமிழச்சி தங்க பாண்டியன் கருத்து கூறினார்.
இதேபோல் அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யனும், அந்த விளம்பரத்தை உருவாக்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு பிராண்ட் மரியாதையின்றி நடந்துகொள்வதை நியாயப்படுத்த முடியாது என்றும் சத்யன் கூறினார்.

