கழுத்தில் கத்தியை வைத்து பெண் கடத்தல்- ஆட்டோவில் பாலியல் தொல்லை!

 
s

சென்னை அடுத்த கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து கோயம்பேடு செல்வதற்காக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளம் பெண் பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் கோயம்பேட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி இளம்பெண்ணை ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளார். 

ச்

பின்னர் வண்டலூர் அருகே ஆட்டோவில் மேலும் இரண்டு நபர்கள் ஏறிய நிலையில் ஆட்டோ ஓட்டுனர் உட்பட மூவரும் சேர்ந்து ஓடும் ஆட்டோவில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர். அப்போது அவர் கத்தி கூச்சலிட அவரது வாயை அழுத்தியும், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இளம் பெண் தனது ஆண்நண்பருக்கு தகவல் கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக காவல் கட்டுப்பட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் ஆட்டோவை பின் தொடர்ந்து சென்ற நிலையில், சென்னை நெற்குன்றம் மாதா கோவில் தெருவில் இளம்பெண்ணை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டுனர் உட்பட மூவரும் தலைமறைவாகினர். 

பின்னர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்டு அவர் அளித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பெண் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துவிட்டு தலைமறைவாக உள்ள ஆட்டோ ஓட்டுநர் உட்பட மூன்று பேரை கைது செய்ய பல்லாவரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

நேற்று, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் வண்டலூர், பெருங்களத்தூர், போரூர் சுங்கச்சாவடி, மதுரவாயல் மற்றும் நெற்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் குற்றவாளிகள் குறித்து எந்தவித துப்பும் கிடைக்காததால், இன்று வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக ஆட்டோ சென்றிருக்கலாம் என்கிற கோணத்தில் வெளிவட்ட சாலையின் அருகிலுள்ள கடைகள், வீடுகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  மேலும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு உடலில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.