பூங்கா அமை​க்க​​ தோண்டப்பட்ட பள்ள​த்தில் விழுந்து சிறுமி​ பலி - அன்புமணி வேதனை!!

 
pmk

பூங்கா அமைப்பதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து சிறுமி ஹாசினி உயிரிழந்ததற்கு  அன்புமணி வேதனை தெரிவித்துள்ளார். 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட மூலக்கடை அருகே சரவணன் -கார்த்திகா தம்பதிக்கு 8 வயது மகள் ஹாசினி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சமத்துவபுரம் பகுதியில் உள்ள பூங்கா விரிவாக்க பணிகளுக்காக ஓடைப்பட்டி பேரூராட்சி சார்பில் தோண்டப்பட்ட 5 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார் . 

tn

இதையடுத்து சிறுமியை நீண்ட நேரம் காணாததால் அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடிய நிலையில் பள்ளத்தில் இருந்த தேங்கியிருந்த தண்ணீரில் , சிறுமியின் காலனி மிதந்து கிடந்துள்ளது.  இதையடுத்து சிறுமியை அங்கு தேடி பார்த்த போது அவர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.  பின்னர் சிறுமியின் உடலை கைப்பற்றிய ஓடைப்பட்டி போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

anbumani

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "தேனி மாவட்டம் ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில், இயற்கை அழைப்புக்காக சென்ற போது,  பூங்கா அமைப்பதற்காக தோண்டி வைக்கப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து ஹாசினி என்ற 8 வயது சிறுமி உயிரிழந்தது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பூங்கா அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றிலும் தடுப்பு அரண்கள் வைக்கப்படாததும்,  கழிப்பறை வசதிகள் செய்து தரப்படாததும் தான் அப்பாவி சிறுமி உயிரிழந்ததற்கு காரணம் ஆகும்.  சின்னமனூர் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் தான் இதற்கு காரணம் ஆகும்!


சிறுமி ஹாசினியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த பேரூராட்சி அதிகாரிகள், அந்தக் குழந்தையின் உயிரிழப்பை மூடி மறைக்கவும் முயன்றிருக்கிறார்கள். பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் முயற்சியால் தான்  சிறுமி ஹாசினியின் உயிரிழப்பு வெளியில் வந்திருக்கிறது! அலட்சியமாக செயல்பட்டு ஹாசினியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம்  இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்! " என்று குறிப்பிட்டுள்ளார்.