திடீரென கரை ஒதுங்கிய ராட்சத டால்பின்! தனுஷ்கோடி கடற்கரையில் குவிந்த மீனவர்கள்...!!
Sep 11, 2026, 10:11 IST1789101669379
தனுஷ்கோடி தெற்கு கடற்கரை பகுதியில் நேற்று டால்பின் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கி கிடப்பதாக வனத்துறையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர், அந்த டால்பினை பார்வையிட்டனர். அது உயிருக்கு போராடிய நிலையில் துடித்து கொண்டிருந்தது.
உடனடியாக வனத்துறையினர் கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்தனர். கரை ஒதுங்கி கிடந்தது பெண் டால்பின் ஆகும். சுமார் 7 அடி நீளமும், 200 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் டால்பினை அதில் இருந்து பாதுகாக்க வனத்துறையினர் அதன்மேல் சிறிய தார்ப்பாயை பிடித்தபடி நிழல் அமைத்து கொடுத்தனர். தொடர்ந்து அங்கு வந்த கால்நடை டாக்டர், டால்பினுக்கு சிகிச்சை அளித்தார். அந்த டால் பினை மீண்டும் ஆழ்கடலில் கொண்டு சென்று விடும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

