இதை தெரிஞ்சிக்கோங்க..! ஜூலை 1 முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம்..!

 
1 1

ரயில் தட்கல் டிக்கெட் சேவையில், வருகிற ஜூலை 1 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இனிமேல் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அடையாளம் கட்டாயமென்றும் தெரிவித்துள்ளது. ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்களுக்கு தட்கல் முன்பதிவு நேரத்தில் 30 நிமிடங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏசி பெட்டிகளுக்கு காலை 10 முதல் 10.30 மணி வரையிலும் ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு காலை 11 முதல் 11.30 மணி வரையிலும் முகவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.

 ஒவ்வொரு மாதமும் முதல் தேதி LPG சிலிண்டர் விலையில் திருத்தங்களை மேற்கொள்ளும். அதன்படி ஜூலை மாதத்தில் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இதேபோல் IRCTC இணையதளம் மற்றும் செயலி மூலம் தட்கல் டிக்கெட் பெற ஆதார் (OTP) அடிப்படையிலான சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது, IRCTC கணக்குடன் ஆதார் இணைப்பு மற்றும் சரிபார்ப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஜூலை 15 ரயில்வே முகவர்கள் மற்றும் ரயில் நிலையக் கவுன்டர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளும் இனிமேல் ஆதார் எண் மற்றும் OTP சரிபார்ப்பு மூலம் மட்டுமே தட்கல் டிக்கெட் பெற முடியும்.

ஜூலை 1 ஆம் தேதி முதல் விரைவு ரயில்களின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த இந்திய ரயில்வே திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஏசி அல்லாத விரைவு ரயில்களில் ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா வீதம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோன்று, ஏசி விரைவு ரயில்களில் ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா வீதம் டிக்கெட் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணத்திற்கான டிக்கெட்டில் 500 கிலோமீட்டர் தொலைவிற்கு எவ்வித மாற்றமும் செய்யப்போவதில்லை என கூறப்படுகிறது. அதே சமயம், விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணத்தில் 500 கிலோமீட்டருக்கு பிறகு, ஒவ்வொரு கிலோமீட்டருக்கு தலா 50 காசுகள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜூலை 1ம் தேதி மாற்றம் செய்யப்படவுள்ள புதிய விதிகளில் பான் கார்டு விதியும் அடங்கும். ஏற்கனவே பான் மற்றும் ஆதார் இரண்டும் இருந்தால், அவற்றை ஒன்றாக இணைப்பதும் அவசியம் என்றும். இதற்கு, டிசம்பர் 31, 2025 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் மத்திய நேரடி வரி வாரியத்தால் (CBDT) இது செயல்படுத்தப்படவுள்ளது.

SBI கார்டு அதன் கிரெடிட் கார்டு ஹோல்டர்களுக்கு குறிப்பிடத்தக்க பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜூலை 15, 2025 முதலில் இருந்து அமலாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. குறைந்தபட்ச தொகை டியூ கணக்கீடு, பணம் செலுத்தும் முறை மற்றும் இலவச ஏர் ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ் நிறுத்தம் போன்ற பல்வேறு மாற்றங்கள் இதில் அடங்கும்.

இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) UPI சிஸ்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தத் தயாராக உள்ளது. இந்த மாற்றம் ஜூன் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. அதன்படி, கூகுள்பே, ஃபோன்பே மற்றும் பேடிஎம் போன்ற அனைத்து UPI-அடிப்படையிலான ஆப்ஸ்களும் இனி பரிவர்த்தனைகளின்போது பெறுநரின் அதிகாரப்பூர்வ பேங்க் அக்கவுன்ட் பெயரை மட்டுமே காண்பிக்கும். தற்போது UPI ஆப்ஸ்கள் பெறுநரின் பெயரையும், அனுப்புநர் தனது மொபைலில் சேமித்து வைத்திருக்கும் நம்பரையும் காட்டுகின்றன. மோசடியை தவிர்க்கும் பொருட்டு இந்த விதி கொண்டுவரப்படவுள்ளது.

HDFC வங்கி அதன் கிரெடிட் கார்டு விதிகளில் முக்கிய மாற்றம் கொண்டுவருகிறது. ஜூலை 1 முதல் அமலாகும் இந்த மாற்றத்தின்படி, கிரெடிட் கார்டு மூலம் கேமிங் செயலிகளில் ரூ.10,000 வரை செலவிடும்போது, அதற்கு தனியாக 1 சதவீதம் கட்டணமும், பேடிஎம், ஃப்ரீசார்ஜ் போன்ற செயலிகள் வழியாக கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதற்கு 1 சதவீதம் கட்டணமும் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் பரிவர்த்தனைகளை கட்டணம் அறிவித்துள்ளது. அதன்படி, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வேறு வங்கியின் ஏடிஎம் மூலம் ஒரு மாதத்திற்கு மூன்று முறைக்கு மேல் பணம் எடுக்கும்பட்சத்தில், ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் 23 ரூபாயும் மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு 8.50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஜூலை மாதத்தில் EPFO 3.0-ஐ அறிமுகப்படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதமே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுநாள் வரை மாற்றம் வரவில்லை. எனவேதான் ஜூலையில் இந்த மாற்றம் அமலுக்கு வரலாம். இது ATMகள் மற்றும் UPI மூலம் உடனடி PF பணம் எடுப்பதற்கும், UPI செயலிகள் மூலம் இருப்புச் சரிபார்ப்புகளுக்கும், விரைவான கோரிக்கை செயலாக்கத்திற்கும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.