“முடிந்தால் எங்களை அப்புறப்படுத்துங்கள்”- தூய்மை பணியாளர்கள் சவால்
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராடி வரும் தூய்மை பணியாளர்கள் உடன் திமுக அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை இன்றும் தோல்வியடைந்தது.

சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் கடந்த 1_ஆம் தேதி முதல் மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும், ஏற்கனவே தனியாருக்கு விட்டதை நிறுத்தி மாநகராட்சியே நடத்த வேண்டும், தற்காலிக தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஏற்கனவே தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (NULM) மூலம் வழங்கப்பட்ட தூய்மைப் பணிகளை அதன் மூலமே தொடர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர். இதனால் அந்த மண்டலங்களில் பொது சேவைப் பணிகள் பாதிக்கப்பட்டு, பொது சுகாதாரப் பணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை காக்க இரவு, பகலாக போராட்டத்தை தொடர்கின்றனர். 12-க்கும் மேற்பட்ட சுற்றுக்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராடி வரும் தூய்மை பணியாளர்கள் உடன் திமுக அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை இன்றும் தோல்வியடைந்தது. தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக பேசி, எப்போது போராட்டத்தை முடித்து கிளம்புவீர்கள் என அமைச்சர்கள் கேட்ட நிலையில், போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் போராட்டம் எதிரொலியாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லக்கூடிய சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இரு வழிகளிலும் வாகனங்கள் சென்று வந்த நிலையில் தற்போது ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

