நாட்டை விட்டு வெளியேறுங்கள்..! வாட்ஸாப் நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை..!

 
1 1

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி, கடந்த 2021-ல் கொண்டு வந்த புதிய தனியுரிமைக் கொள்கையின்படி, பயனர்களின் தகவல்களை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களுடன் கட்டாயமாகப் பகிர வேண்டும் என நிபந்தனை விதித்தது. இதனை எதிர்த்து இந்தியப் போட்டி ஆணையம் (CCI) விதித்த ₹213 கோடி அபராதத்தை எதிர்த்து மெட்டா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, "இந்தியாவின் அரசியல் சாசன சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட விருப்பம் இல்லையென்றால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேறலாம்" என மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நீதிபதிகள் தங்களது வாதத்தில், வாட்ஸ்அப் நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கை மொழிகள் மிகவும் சிக்கலாக இருப்பதைச் சுட்டிக்காட்டினர். "தெருவில் பழம் விற்கும் ஒரு ஏழைப் பெண்ணோ அல்லது கிராமப்புறத்தில் வசிக்கும் சாதாரண மனிதரோ இத்தகைய கடினமான சட்ட மொழிகளை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? இது போன்ற சூழலில் பெறப்படும் 'ஒப்புதல்' ஒருபோதும் அறிவுப்பூர்வமான சம்மதமாக இருக்க முடியாது" என நீதிபதிகள் சாடினர். மேலும், பயனர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து வணிக ரீதியாகச் சுரண்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.

இறுதியாக, இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை, வாட்ஸ்அப் பயனர்களின் எந்தவொரு தரவையும் மெட்டா குழுமத்தின் பிற தளங்களுடன் பகிரக் கூடாது என நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர். தனிப்பட்ட உரையாடல்கள் பாதுகாக்கப்படுவதாக நிறுவனம் கூறினாலும், 'மெட்டா டேட்டா' மூலம் ஒருவரது நடத்தையையும் விருப்பங்களையும் கண்காணிப்பது குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அதிரடி உத்தரவு, இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான வாட்ஸ்அப் பயனர்களின் தரவு பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.