மே - 24ல் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு..

பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 24ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் மே மாதம் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் போன்ற பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மே 8ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று முதலில் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இதற்காக இணைய வழியில் ஏப்ரல் 28ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை பல்வேறு ஆசிரியர்கள் இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்திருந்தனர்.
இந்த சூழலில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இறுதியாக இன்று (மே 22) கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மீண்டும் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு 24ம் தேதி ( புதன்கிழமை) நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.