கீழடி அருங்காட்சியகம் இன்று திறப்பு.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்..

 
கீழடி அருங்காட்சியகம் இன்று திறப்பு.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்..


சிவகங்கை மாவட்டம் கீழடியில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள அகழ் வைப்பகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார்.

கடந்த 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரை கீழடியில் மத்திய  தொழில்துறை மூன்று கட்டங்களாக மேற்கொண்ட அகழாய்வில் 7,818 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டு அங்கு சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டன. அதன்பின் தமிழக தொல்லியல் துறை நான்கு,  ஐந்தாம் கட்ட அகழாய்வுகளில் ஈடுபட்டது.  இதில் 6,000க்கும்  மேற்பட்ட தொல்பொருட்கள்,  பழம் தமிழரின் கட்டுமான பணிகளும் வெளிப்படுத்தப்பட்டன.  இதன் மூலம் வைகை நதிக்கரையில் 2600 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் நிலவியது உறுதியானது.

கீழடி அகழாய்வு

 பழங்கால தமிழ் சமூகம் கிமு 6ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றும் நகர நாகரிகத்துடன் வாழ்ந்து இருப்பதும் தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  இந்நிலையில் வைகை ஆற்று நாகரீகத்தை வெளிப்படுத்தும் வகையில் கீழடியில் தமிழக அரசு சார்பில், 2 ஏக்கர் நிலத்தில் 18. 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கள அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.  இதில் கீழடி அகழாய்ச்சியில் கிடைத்த பல பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் ஆறு காட்சிக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் முக. ஸ்டாலின் இன்று  மாலை 5 மணியளவில் திறந்து வைக்க உள்ளார்.