“பெண்கள் நலனில் அக்கறை கொண்டவர் போல நடிப்பது அபத்தம்”- எடப்பாடி பழனிசாமியை சாடிய கீதா ஜீவன்

 
கீதாஜீவன் எடப்பாடி பழனிசாமி

கல்லூரி மாணவியரிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்வது அருவருக்கத்தக்க செயல் என சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சாடியுள்ளார்.

பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை:  அமைச்சர் கீதாஜீவன்-Tamil Nadu leads among states that provide safety to  women: Minister Geethajeevan

இதுதொடர்பாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கே எது நடக்கும் அதில் நமக்கென்ன அரசியல் ஆதாயம் கிடைக்கும் என அலைந்து கொண்டிருக்கும் பழனிசாமி, படிக்கவரும் கல்லூரி மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் தேவையின்றி அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருப்பது உண்மையிலேயே அருவருக்கத்தக்க செயல். உயர் நீதிமன்றத்திலேயே தமிழ்நாடு அரசு உரிய பதில் அளித்துவிட்ட போதும்  தனது சுய அரசியல் ஆதாயத்திற்காக இல்லாத ஒன்றை இருப்பது போல மேலும்மேலும் வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கும் பழனிசாமிக்கு கடும் கண்டனம்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பின்னிருந்த அதிமுக பிரமுகர்களை காப்பாற்றவும் அதிமுக இளைஞரணியின் பொள்ளாச்சி நகரச் செயலாளராக செயல்பட்டு வந்த முக்கிய குற்றவாளி அருளானந்தத்தை காப்பாற்றவும்  பாதிக்கப்பட்ட பெண்களையே அதிமுகவினர் பகிரங்கமாக மிரட்டிய கொடூரம் நடந்ததை தமிழ்நாட்டு மக்கள் என்றும் மறக்கவே மாட்டார்கள். அதுமட்டுமா உதவி கேட்டு வந்த பெண்ணை "மெயின் ரோட்டிற்கு வா" என முன்னாள் அதிமுக அமைச்சரே பேசி பாலியல் தொந்தரவு கொடுத்த அசிங்கமும் அதிமுக ஆட்சியில் தானே அரங்கேறியது.  இந்த லட்சணத்தில் ஆட்சி நடத்திவிட்டு தற்போது பெண்கள் நலனில் அக்கறை கொண்டவர் போல நடிப்பது அபத்தம்.

DMK MLA Geethajeevan condemns edappadi palanisamy in Sterlite controversy  in Thoothukudi

புதுமைப்பெண் திட்டம் , பெண்கள் விடியல் பயணம் , மகளிர் உரிமைத் தொகை என பெண் கல்விக்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செய்துவரும் திராவிட மாடல் ஆட்சி மீதும் மாண்புமிகு முதலமைச்சர் மீதும் என்ன அவதூறு பரப்பினாலும் அதை தமிழ் நாட்டு பெண்கள் துளியும் நம்பபோவதில்லை. எடப்பாடி ஆட்சியில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளியே வந்து சொல்லவே பயப்பட்ட நிலை இருந்தது. புகார் பெறவே மாட்டார்கள், ஒருவேளை புகாரை பெற்றுக் கொண்டாலும் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மாட்டார்கள். அந்த நிலை மாறி தற்போது திராவிடமாடல் ஆட்சியில் பெண்கள் தைரியமாக வெளியே வந்து தங்களுக்கு நேரந்த கொடுமையை சொல்கிறார்கள் என்றால் அது மாண்புமிகு முதலமைச்சர் மீது தமிழ்நாட்டு பெண்கள் வைத்துள்ள நம்பிக்கை தான். அந்த நம்பிக்கையை இந்த திராவிட மாடல் அரசு என்றும் காக்கும்.

மாணவியின் புகாரை பெற்ற உடனே எவ்வளவு விரைவாக செயல் பட்டு விசாரணை நடத்தி குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளான் என்பது இந்த நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். தேவையின்றி அரசியல் செய்வதையும் வதந்திகளை பரப்பி மாணவிகளின் கல்வியோடு விளையாடுவதையும் நிறுத்தி கொள்ளுங்கள். நீங்கள் என்னதான் அச்சுறுத்தி பெண்களை வெளியே வராதே, படிக்க வராதே என மறைமுகமாக தடுக்க முயன்றாலும் தமிழ்நாட்டு பெண்கள் தைரியமாக வெளியே வந்து வாழ்வின் உயர்நிலைக்கு செல்வார்கள் அதற்கு இந்த திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும். தனக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், படிக்கும் மாணவர்கள் சார்ந்த இந்த சென்ஸிட்டிவ் விவகாரத்தில் அரசியல் செய்து, அரசியல் அறத்தையும் மாண்பையும் குழி தோண்டி புதைத்துவிட்டார் பழனிசாமி. அவரது இந்த அற்பத்தனமான செயலை தமிழ்நாட்டு மக்கள் என்றும் மன்னிக்கமாட்டார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.