இரட்டை இலைக்கு வாக்களிக்க நோட்டீஸ் கொடுத்த காயத்ரி ரகுராம்... தாமரைப் பூவை நீட்டிய ஆட்டோ டிரைவர்..!

 
1

அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத்தை ஆதரித்து, நடிகை காயத்ரி ரகுராம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் தேரடி வீதியில் பிரசாரம் செய்தார்.

அப்போது ஒரு ஆட்டோவிடம் சென்றார். அங்கிருந்த டிரைவரிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு நோட்டீஸை அளித்தார். அப்போது அந்த நபர் நீங்கள் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என தாமரைப் பூவை நீட்டினார். அப்போது காயத்ரி, நான் பாஜகவிலிருந்து விலகிவிட்டேன்.

தற்போது அதிமுகவில் இருக்கிறேன். அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்றார். மீண்டும் அந்த நபர் தாமரையை கொடுத்தார். இதனால் அவர் வாங்கிக் கொண்டார். பிறகு நோட்டீஸை, காயத்ரி நீட்டியபோது அவர் வாங்கிக் கொள்ளவில்லை. உடனே காயத்ரி, "நீங்கள் கொடுத்த போது நான் வாங்கிக் கொண்டேனே, நீங்களும் வாங்கிக்கணும்" என்றார். உடனே அந்த நபர் வாங்கிக் கொண்டார். இதையடுத்து கடை கடையாக சென்ற காயத்ரி, "எடப்பாடி ஐயா , எல்லாருக்கும் நல்லது செய்வார், அவருக்கே ஓட்டு போடுங்கள், பாஜக, காங்கிரஸ் மாறி மாறி ஆண்டும் மக்களுக்கு நல்லது செய்யவில்லை, எடப்பாடிக்கு விவசாயம் தெரியும், அவர்களுடைய கஷ்டங்கள் தெரியும். எனவே இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள்" என காயத்ரி கேட்டுக் கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

பாஜ உங்களை ஏமாத்துறாங்க. தேசிய வாதிகள் என்று சொல்லி பொய், பொய்யாக பேசுறாங்க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கனவை, அதிமுககாரங்க அழிச்சிட்டாங்க என்று மோடிஜி சொல்றாரு. அவரு தான், மக்கள் கனவை அழிச்சிட்டாரு. பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கனவை அழிச்சவரு மோடிஜி தான். நான் அந்த கட்சியில 10 வருஷமா இருந்தேன். அவங்க எப்படியெல்லாம் பொய் பேசுவாங்கனு எனக்கு தெரியும்.

தேர்தல் பத்திரத்தில் ₹8000 கோடி வாங்கி இருக்கிறாங்க. கருப்பு பணத்தை ஒழிப்பேன்னு சொன்னவரு, வேறு விதமான அந்த கருப்பு பணத்தை கட்சிக்கு வாங்கிட்டாரு. தமிழ்நாட்டுக்கு உரிய நிதி தரல. 1 ரூபாய் வாங்கிட்டு, 29 பைசா தராங்க. நிதி அமைச்சரு, காசு இல்லாததால் தேர்தல நிக்கலனு சொல்றாங்க. ₹8000 கோடி தேர்தல் பத்திரம் இருக்குல. அத வச்சு தேர்தல நிற்க வேண்டியது தானே. மக்கள் கனவை சிதைச்சவரு மோடி. அதிமுகவை உடைக்க திட்டமிட்டு, குழந்தையை கடத்தற மாதிரி, ஒவ்வொருத்தராய் இழுக்க பார்க்காங்க. இ.டி. யை காட்டி மிரட்டுறாங்க. அந்த கட்சிய நம்பி, போன ஒருத்தரு, பழத்தை வாங்கி நிக்கிறாரு.

ஒரு பெண் எம்.எல்.ஏ. (விஜயதரணி) இந்த மாவட்டத்துல இருந்து போய், இப்போது நடு ரோட்ல நிக்கிறாங்க. எம்.பி. சீட் அவுங்களுக்கு கொடுக்கல. மிடில் கிளாஸ், ஏழை பேமிலி தான் வரிய ஒழுங்காக கட்டுறாங்க. ஆனால் மோடி அரசு, பணக்காரங்களுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் வரியை தள்ளி இருக்காங்க. மக்கள நிம்மதியாக இருக்க விட மாட்டாங்க. கடன்காரனாக ஆக்கிட்டாங்க. 10 வருஷமா கச்சதீவு பற்றி பேசாதவங்க, இப்போது பேசுறாங்க. அருணாசல பிரதேசத்தை பற்றி பேச மாட்டாங்க. இவ்வாறு அவர் பேசினார்.