டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! பற்றி எரிந்த மதுபானக் கடை

புதுச்சேரி அடுத்த திருபுவனையில் சாராயக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி திருபுவனை அடுத்த மதகடிப்பட்டு பகுதியில் சாராயக்கடை உள்ளது. அங்கு குச்சிபாளையம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பகவதி (35) மற்றும் மேகராஜன் ஆகியோர் காசாளராக பணியாற்றி வருகின்றனர். மேலும் அங்கு செக்யூரிட்டியாக தேவராஜ் என்பவரும் வேலை செய்கிறார். அங்கு வந்த 3 பேர் ரூ.500ஐ கொடுத்துவிட்டு சாராயம் கேட்டுள்ளனர். அதற்கு அங்கிருந்த பணியாளர்கள் சில்லரையாக தருமாறு கூறினார்கள். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் பணியாளர்களிடம் தகராறில் ஈடுபட்டதோடு அவர்களை தாக்கி அங்கிருந்த சாராய காலி பாட்டில்களை அவர்கள் மீது வீசியெறிந்து விட்டு ரகளை செய்தனர்.
பின்னர் அதிகாலை நேரத்தில் மீண்டும் அங்குவந்த 3 பேர் கும்பல், சாராய பாட்டில்களில் பெட்ரோல் ஊற்றி அதில் தீ வைத்து சாராயக் கடைக்குள் வீசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் சாராய குடிசை கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் பகவதி, மேகராஜன், செக்யூட்டி தேவராஜ் ஆகியோர் தீயை உடனே தண்ணீர் ஊற்றி அணைத்து விட்டு பாதுகாப்புக்காக அருகிலுள்ள குடோனில் சென்று மறைந்துள்ளனர். மேலும் இதுபற்றி திருபுவனை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேற்கு எஸ்பி வம்சித ரெட்டி உத்தரவின்பேரில் திருபுவனை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், எஸ்ஐ ராஜசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அங்கு சாராயக்கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரின் அடையாளம் கண்ட போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடினர். இதனிடையே போலீசாரால் தேடப்பட்ட 3 பேரும், ஆண்டியார்பாளையம் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படையினர், விழுப்புரம் மாவட்டம், பசுரெட்டிப்பாளையம் ரவி மகன் விவேக் (28), தென்னல் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (26), வில்லியனூர் நடராஜன் (27) ஆகியோரை சுற்றிவளைத்தனர். இதில் 2 பேர் அருகிலுள்ள கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து தப்பிவிட்ட நிலையில் மற்றொருவரான விவேக்கை துப்பாக்கி முனையில் மடக்கிய போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
பின்னர் அவரிடம் சம்பவத்துக்கான காரணம் குறித்து, தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே வழக்குகளில் உள்ள விவேக், பிரபல ரவுடி ஜனாவின் கூட்டாளி என்பது தெரியவந்தது.