ஒரே வாரத்தில் பூண்டு விலை ரூ.150 வரை உயர்வு! இன்னும் விலை ஏறுமாம்
உணவுப் பொருட்களில் பூண்டு முக்கிய பங்கு வகிக்றது. வீடுகளில் சமைக்கப்படும் சாம்பார், ரசம், பொரியல் உள்ளிட்ட உணவு வகைகளுக்கும் பூண்டு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடலில் வாய்வு பிடிப்பை போக்குவதற்கு உணவு வகைகளில் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. வட மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலமாக பூண்டு தமிழகத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வட மாநிலங்களில் நிலவிய கடும் வெப்பம் , அதன் பின் பெய்த கனமழை போன்ற காரணங்களால் அங்கு விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கான பூண்டு வரத்து என்பது வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பூண்டின் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு கிலோவுக்கு 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. பூண்டு உள்ளிட்ட உணவு பொருள்களின் விலை ஏற்றத்தால் குடும்ப பெண்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.
பூண்டு விலை ஏற்றம் குறித்து சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள மொத்த வியாபாரிகள் கூறும்போது, பூண்டு வரத்து குறைந்துவிட்டது. குறிப்பாக குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பூண்டு விளைச்சல் குறைந்ததால் தமிழகத்திற்கான வரத்தும் குறைந்து வருகிறது. இதனால் பூண்டின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் இருநூறு ரூபாய் முதல் 220 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ பூண்டின் விலை தற்போது ஒரு கிலோ 320 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனையாகிறது. இன்னும் பதினைந்து நாட்களில் பூண்டின் விலை 450 ரூபாய் வரை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
பூண்டு விலை குறித்து பெண்கள் கூறும் போது சாம்பார், ரசம், பிரியாணி என அனைத்து குழம்பு வகைகளுக்கும் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. எனவே பூண்டு விலை உயர்ந்து வருவதால், அதை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் நூறு ரூபாய் அளவில் ஒரு கிலோவுக்கு பூண்டின் விலை அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் பூண்டின் பயன்பாட்டை குறைக்க வேண்டியது தான் என வேதனை தெரிவித்தனர்.