கணேசனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு..!
ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி சிறுமிகளுடன் இருக்கும் வீடியோ ஆதாரங்களை மறைத்ததாக அவரது முன்னாள் உதவியாளர் கணேசன் கைது செய்யப்பட்டார். கணேசனின் செல்போனில் வீரமணி சிறுமிகளிடம் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் இருந்ததாகவும், அவற்றை காவல்துறைக்கு தெரிவிக்காமல் மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கணேசனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. கணேசனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.
சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறை வழக்குப்பதிவு செய்து ஆகஸ்ட் 29ம் தேதி கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் வீரமணியின் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தில் சுமார் 23 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த அவரது உதவியாளர் கணேசன் குறித்தும் காவல் துறைக்கு தகவல்கள் கிடைத்தன. கணேசன், ஜெம் நிறுவனத்தில் இருந்து விலகி, பாலாஜி குளோபல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வருகிறார் என்பதையும் காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
உடனடியாக, கணேசனை கைது செய்து அவரது செல்போனை ஆய்வு செய்த போது அதில் பல சிறுமியிடம் வீரமணி ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோ தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் தனது செல்போனில் வைத்திருந்ததாக கணேசன் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆபாச வீடியோக்களை வைத்திருந்தது மற்றும் அது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கணேசனை கைது செய்த காவல்துறையினர் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.
போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பத்மா முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கணேசனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் கணேசணை புழல் சிறைக்கு அழைத்து சென்று காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே, வீரமணியிடம் இருந்து சுமார் 70 கோடி ரூபாய் வரை காவல் துறை மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு பணம் கைமாறி இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், வீரமணியின் வீடியோ ஆதாரங்களும் கிடைத்திருப்பது வழக்கை மேலும் வலுவடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

