“பரந்தூர் விவகாரம்- நிரூபித்து காட்டினால் நிலத்தை இலவசமாகவே தருகிறோம்”... தவெகவுக்கு ஜி ஸ்கொயர் சவால்

 
vijay

பண்ணூர் கிராமத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை; ஜி ஸ்கொயர் பெயரில் உள்ளதாக உண்மையான தகவல் அளித்தால் நீங்கள் அடையாளம் காட்டும் நபருக்கே இலவசமாக மாற்றிக்கொடுக்க தயார் என தவெக செய்தி தொடர்பாளர் ஜெகதீசனுக்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் சவால் விடுத்துள்ளது.

பரந்தூர் போராட்டக்காரர்களை சந்திக்கிறார் விஜய்? 

இதுதொடர்பாக ஜி ஸ்கொயர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பண்ணூர், திருப்பந்தியூர் மற்றும் திருமேனி குப்பம் ஆகிய கிராமங்களில் எங்கள் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு எந்த நிலமோ சொத்தோ இல்லை என்ற அறிக்கை. எங்கள் வணிகப் போட்டியாளர்கள் மூலமாகவே பல உண்மைக்கு புறம்பான செய்திகள் பல தளங்களில் பரப்பப்படுகிறது என்று உறுதியாக நம்புகிறோம். இது உங்கள் கட்சி மற்றும் எங்கள் நிறுவனத்தின் நற்பெயரை பொதுமக்களின் பார்வையில் களங்கப்படுத்தக்கூடும். இதுபோன்ற தவறான தகவல்களை எதிரிகள் தொடர்ந்து பரப்புவதால் அன்புக்குரிய தமிழக வெற்றிக் கழக முன்னணி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் விழிப்புடன் இருக்குமாறு நாங்கள் பணிவாக கேட்டுக்கொள்கிறோம். பண்ணூர் கிராமத்தில் மொத்தமே 800 ஏக்கர் நிலங்கள் மட்டுமே உள்ளன. 

பண்ணூர், திருப்பந்தியூர் மற்றும் திருமேனி குப்பம் கிராமங்களில் 1 முதல் 440 வரை சர்வே எண்கள் உள்ளன. இந்த சர்வே எண்களில் பதிந்துள்ள நில உரிமையாளர்களின் பெயர்களை தமிழ்நாடு அரசு நிலப் பதிவேடு மற்றும் சர்வே போர்டலில் பார்க்க முடியும். மேலும் 2006 முதல் 2011 வரை இந்த மூன்று கிராமங்களிலும் அநேக நிலங்களின் பதிவுகள் நடந்து முடிந்து விட்டன. ஆனால் ஜி எஸ்கொயர் நிறுவனமோ 2012ல் தான் தொடங்கபட்டது. 


அப்படி இருக்கும் பட்சத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனம் அங்கு நிலங்களை கையகப்படுத்தி உள்ளது என்ற வாதம் உண்மையற்றது. 20.01.2025 அன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "விவாத மன்றம்" நிகழ்ச்சியில் பகிர்ந்த செய்தி எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரு. ஜெகதீசள் பதிவு மொத்தமாக நிகழ்ச்சி நடந்த 43 நிமிடங்களில் சரியாக 21:00 முதல் 23:00 நிமிடத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனம் பண்ணூர் கிராமத்தில் 900 ஏக்கர் நிலத்தை வைத்துள்ளதாக தவறாக உங்களால் தெரிவிக்கப்பட்டது. "பண்ணூர் கிராமத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை" இதற்குப் பிறகும் பண்ணூர், திருப்பந்தியூர் மற்றும் திருமேனி குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள நிலங்கள் எங்கள் ஜி ஸ்கொயர் பெயரிலோ அல்லது எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த யாரேனும் ஒருவரின் பெயரிலோ உள்ளதாகத் உண்மையான தகவல் அளித்தால், அந்த நிலத்தை நீங்கள் அடையாளம் காட்டும் நபருக்கு இலவசமாக மாற்றிக் கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.