என்.எல்.சியை கண்டித்து கடலூரில் முழு அடைப்பு போராட்டம்.. 7000 போலீஸார் குவிப்பு..

கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு பாமக அழைப்பு விடுத்துள்ள நிலையில், அங்கு சுமார் 7ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி இந்தியா நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்தி இருந்தது. இந்த கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தும் என்.எல்.சி, சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்தது. ஆனால் நடந்த பேச்சுவார்த்தையில் உஅன்பாடு ஏற்படவில்லை..
இந்த நிலையில் கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில், என்.எல்.சி நிறுவனம் நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் தோண்டி எல்லை வரையறை செய்ததுடன், விவசாய நிலத்தை நவீன இயந்திரங்கள் உதவியுடன் சமன் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். இதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பா.ம.க.வினர் போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை பறித்து சொந்த மண்ணில் மக்களை அகதிகளாக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தின் போக்கை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் இன்று மாபெரும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு பா.ம.க. நிறுவன தலைவர் அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார். இதற்காக ஆதரவு கேட்டு வணிகர்கள், பேருந்து உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர். இதனால் நேற்று கடலூர் மாவட்டத்தில் பதற்றமான சூழல் உருவானது.
கடலூரில் வழக்கம்போல் கடைகளை திறக்கலாம் என்றும், வாகனங்களை இயக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவித்த நிலையில், இன்று வியாபாரிகள் அச்சமின்றி கடையை திறக்கலாம்; கடையை மூட வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பியும் எச்சரித்திருந்தார். முழு அடைப்பு போராட்டத்துக்கான அழைப்பையொட்டி கடலூரில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கையாக பாமகவினர் 40 பேரை கைது செய்துள்ளனர். கடலூரில் 100 சதவீதம் அரசு பேருந்துகளும் 50 சதவீதம் தனியார் பேருந்துகளும் இயக்கப்படும் நிலையில் , புதுச்சேரிக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் கடைகள், சந்தையில் வியாபாரிகள் வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.