நாளை முதல் மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை வாட்ஸ் ஆப்பில் பெறலாம்

 
metro

மெட்ரோவில் பயணிக்க 'வாட்ஸ் ஆப் டிக்கெட்' என்ற புதிய வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நாளை அறிமுகப்படுத்துகிறது.

Image

சென்னையில் 54.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு பச்சை மற்றும் நீலம் வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது அலுவலகம்,பள்ளி கல்லூரி செல்லக்கூடியவர்கள், சுற்றுலா பயணிகள் என நாளொன்றுக்கு சென்னை மெட்ரோ ரயிலில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர்.  மெட்ரோ ரயில் மூலம் சென்னையை இணைக்கும் வகையில்  116.1 கிலோமீட்டர் தொலைவில் மூன்று வழித்தடங்களில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் வருகை அதிகரிக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் தொடர்ந்து பல சலுகைகள் வழங்கி வருகிறது, பயணிகள் அட்டை (Travel card) மூலம் 20% கட்டண சலுகை, 100 ரூபாயை செலுத்தி நாள் முழுவதும் மெட்ரோவில் பயணிக்கும் திட்டம், 2500 ரூபாய் செலுத்தி மாதம் முழுவதும் பயணிக்கும் மாதாந்திர அட்டை திட்டம், 20கும் மேற்பட்ட நபர்கள் பயணித்தால் 'குரூப் டிக்கெட்' என்ற சலுகை திட்டம், சமீபத்தில் அறிமுகப்படுத்திய சிங்காரச் சென்னை அட்டை என பல வழிகளில்  கவர்ந்து வருகிறது. 

அந்த வகையில் வாட்ஸ் ஆப்  மூலம் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளும் முறையை சென்னை மெட்ரோ நிர்வாகம் நாளை அறிமுகப்படுத்துகிறது இதற்கான அறிமுக விழா சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நாளை நடைபெற உள்ளது.  தன்னுடைய மொபைலில் இருந்து மெட்ரோ நிர்வாகத்தின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தங்களுடைய பயண விவரத்தை தெரிவித்து, யுபிஐ மூலம் அதற்கான கட்டணத்தை செலுத்தி கியூ ஆர் கோட் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். அந்த கியூ ஆர் கோட் டிக்கெட்டை ரயில் நிலையங்களில் காட்டி மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த முறை நாளை முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.