திருப்பூர் முதல் ஆம்பூர் வரை: தமிழகத்திற்கு ‘கேம் சேஞ்சர்’ ஆக அமையும் ஐரோப்பிய ஒப்பந்தம் - அண்ணாமலை..!
தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வரலாற்று சிறப்பு மிக்க இந்தியா- ஐரோப்பிய யூனியன தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றொரு சாதாரண ஒப்பந்தம் அல்ல. இது அனைத்து ஒப்பந்தங்களின் தாய். 200 கோடி மக்களை இணைக்கும் தடையற்ற வர்த்தகப் பாதை ஆகும், உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டதட்ட25 சதவீதத்தையும், உலக மக்கள் தொயைில் சுமார் 30 சதவீதத்தையும் உள்ளடக்கியது.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சிக்கு ஒரு பெரும் உந்துசக்தியாக அமையும். இது நமது தொழில்முனைவோருக்கு உலகின்மிகவும் செழிப்பான மற்றும் நிலையான சந்தைகளில் ஒன்றில் நுழைவதற்கான வாய்ப்பை வழங்கும்.
தமிழகத்தை பொறுத்த வரை இந்த ஒப்பந்தம் ' கேம் சேஞ்சர்' ஆக அமையும். ஜவுளித்துறைக்கு பூஜ்ஜிய வரி என்பதால், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இப்போது 263.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐரோப்பிய யூனியன் ஜவுளி சந்தையில் அச்சமின்றி போட்டி போட முடியும் இது பெரிய ஆர்டர்களைப் பெற்று நமது நெசாவளர்கள்,சாயமிடுபவர்கள் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
தோல் மற்றும் காலணிப் பொருட்களுக்கு வரி நீக்கப்படுவது வேலூர் மற்றும் ஆம்பூர் போன்ற தொழில் மையங்களுக்கு உத்வேகம் அளிக்கும்.
சென்னை, ஓசூர், கோவை, தூத்துக்குடி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து வரும் பொருட்கள்,வாகன உதிரி பாகங்கள்,மின்னணுவியல் பொருட்கள்கடல் உணவுப்பொருட்கள்,மசாலாப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஆகியவை இப்போது அதிக போட்டித் திறனுடன் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்.விவசாயிகள் மற்றும் மீனவர்கள் முதல் சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் ஸ்டார்ட் நிறுவனங்கள் வரை தமிழகத்தின் பிற மாவட்டங்கள் முழுவதும் இந்த ஒப்பந்தத்தின் சாதகமான அம்சங்களை வேலைவாய்ப்புகள் ,வருமானம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் உணரும்.இந்தியா தெளிவான ஒரு லட்சுமணக்கோட்டை வரைந்துள்ளது. பால் பொருட்கள், தானியங்கள், கோழி வளர்ப்பு, சோயா மற்றும் தேர்வு செய்யப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பாதுகாத்து, ஏற்றுமதி வளர்ச்சி அதிகரித்தாலும் நமது விவசாயிகள் மற்றும் முக்கியத்துறைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவது உறுதி செய்துள்ளது.
பல ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைக்கு அப்பால் செல்லத் தயாராக இல்லை. பிரதமர் மோடியின் திறமையான தலைமையின் கீழ் ஒரு புதிய இந்தியா தனது அரசியல் நிலைத்தன்மை, வளர்ச்சி, ஆற்றல் மற்றும் சீர்திருத்த நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளதால் அவர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு உள்ளார்கள்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், முடக்க நிலையில் இருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மொரிஷியஸ் CECPA (2021), யுஏஇ CEPA (2022), ஆஸ்திரலேியா ECTA (2022), EFTA pact (2024), பிரிட்டன் CETA(2025) மற்றும் தற்போது ஐரோப்பிய யூனியனின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் FTA ஆகியவை இணைந்து இந்திய ஏற்றுமதிகளுக்கு பல வளர்ந்த மற்றும் அதிக வருமானம் கொண்ட சந்தைகளில் ஏறக்குறைய முழுமையான அல்லது மிக உயர்ந்த வரி இல்லாத நிலையை வழங்குகிறது.பல ஆண்டுகளாக அயராது பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் போன்ற ஒப்பந்தத்தை சாத்தியமாக்கி,பிரதமரின் தொலைநோக்கு பார்வையை ஒவ்வொரு இந்தியருக்கும் உறுதியான நன்மைகளாக மாற்றிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பெரிய வணக்கம்.
இன்றைய உலகில் சில நாடுகள் மற்ற நாடுகளை சார்ந்திருக்கும் அபாயத்தை குறைக்க சிந்திக்கும் நிலையில், இந்தியா நம்பிக்கையான, விதிகள் அடிப்படையிலான, அதிக வளர்ச்சி கொண்ட கூட்டாளியாக உயர்ந்துள்ளது. இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், பாரதத்தின் எழுச்சியில் ஐரோப்பாவின் தெளிவான நம்பிக்கை ஓட்டெடுப்பு ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


