இனி மாமன் மகளை திருமணம் செய்ய முடியாது..??
நெருக்கமான ரத்த சொந்தங்களுக்கு இடையே நடைபெறும் திருமணங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து ஒன்றிய அரசின் கருத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. நீதிமன்றங்களால் இத்தகைய திருமணங்களைத் தடுக்க முடியாது என்றும், இதனைக் கட்டுப்படுத்துவதற்கான சமூகச் சீர்திருத்தச் சட்டங்களைக் கொண்டுவரும் அதிகாரம் அரசின் வசமே உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளது.
நெருங்கிய ரத்த உறவுகளுக்கு இடையேயான திருமணங்களால் ஏற்படும் உடல்நல மற்றும் மரபணு பாதிப்புகளை தடுக்க உரிய வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி, 40 சதவீத பார்வை குறைபாடுடைய சட்ட மாணவி சாருவி என்பவர் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பக்சி விசாரித்தனர்.
நீதிபதி ஜாய்மால்யா பக்சி கூறுகையில், ''எச்.ஐ.வி., பாதிப்புள்ள நபரை திருமணம் செய்வது தொடர்பான வழக்கில், திருமணம் என்பது தனிநபர் விருப்பம் சார்ந்தது என, இந்த நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.
கட்டாய உத்தரவுகளை பிறப்பித்து நீதிமன்றங்களால் இதை ஒழுங்குபடுத்த முடியாது.''ஆனால், அது போதிய விழிப்புணர்வுடன் எடுக்கப்படும் முடிவாக இருக்க வேண்டும்.
பாரம்பரியமாக தொடரும் ரத்த உறவு திருமணங்களை சமூக சீர்திருத்தச் சட்டம் மூலம் மறுபரிசீலனை செய்வது என்பது முற்றிலும் சட்டசபை, பார்லி.,யின் அரசியலமைப்பு அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை,'' என்றார்.மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நாங்கள் சட்டம் இயற்ற கோரவில்லை. தற்போதைய சட்ட கட்டமைப்பிற்குள்ளேயே சில பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்கவே கோருகிறோம். தரவுகளின்படி, தென் மாநிலங்களில் இத்தகைய திருமணங்கள், 28 சதவீதம் வரை அதிகமாக உள்ளன.
குறிப்பாக, கிராமப்புறங்களில் இதன் பின்விளைவுகள் தெரியாமலேயே குடும்பத்திற்குள் திருமணம் செய்கின்றனர். அரசியலமைப்பு பிரிவு - 51-ன் கீழ் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது அடிப்படை கடமை' என, வாதிட்டார்.நகர்ப்புறங்களிலும் கூட இந்த போக்கு காணப்படுவதாகக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், ''இது, நம் அனைவருக்கும் நிச்சயம் கவலையளிக்கும் ஒரு விஷயம். இந்த மாணவி மீது எங்களுக்கு முழு அனுதாபம் உள்ளது. இந்த முக்கிய பணியை கையில் எடுத்ததற்காக அவருக்கு நன்றி,'' என்றார்.
கிராமப்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பஞ்சாயத்துகளையும் ஈடுபடுத்தலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ரத்த உறவுகளுக்கு இடையேயான திருமணங்களின் எதிர்மறையான விளைவுகள் குறித்து, மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை உருவாக்க, தகுந்த சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலிக்கவும் அல்லது பள்ளி, கல்லுாரிகளில் உரிய பாடத்திட்டங்களை சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துக்காக, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்தி வைத்தனர்.

