இனி நீங்க தூங்கும்போது கூட வாட்ஸ்அப் மெசேஜ் போகும்..! – இந்த ஒரு செட்டிங் மட்டும் தெரிஞ்சா போதும்; அசந்து போவீங்க!

 
1

இரவு 11:58 மணி; உறவினரின் பிறந்தநாள் தொடங்க இன்னும் இரண்டு நிமிடங்களே இருக்கும் நிலையில், கண்கள் சொருகத் தொடங்கும். முதலாவதாக வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக விழித்திருக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு; ஆனால் அது தூக்கத்தைக் கெடுக்கும். இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக, தனிநபர் மற்றும் குழு அரட்டைகளில் (Individual and Group Chats) மெசேஜ்களை முன்கூட்டியே ஷெட்யூல் செய்யும் வசதியை வாட்ஸ்அப் (WhatsApp) கொண்டு வரத் தொடங்கியுள்ளது. ஐபோன் (iPhone) மற்றும் ஆண்ட்ராய்டு (Android) ஆகிய இரு தளங்களிலும் இந்த வசதி படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

நள்ளிரவு 12 மணிக்கு வாழ்த்துச் சொல்வது அன்பான விஷயமாக இருந்தாலும், அதற்காகத் தூக்கத்தை இழந்து, மொபைல் திரையைப் பார்த்துக் கொண்டு, மறுநாள் காலையில் சோர்வாக எழுந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மெசேஜ் ஷெட்யூல் வசதி மூலம், நீங்கள் நேரத்திற்குத் தூங்கினாலும் உங்கள் வாழ்த்து சரியான நேரத்தில் சென்று சேரும்.

இந்த வசதியைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. வழக்கம்போல மெசேஜை டைப் செய்துவிட்டு, அனுப்பும் பொத்தானை (Send button) அழுத்திப் பிடிக்க வேண்டும்; பின்னர் மெசேஜ் அனுப்ப வேண்டிய தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் கணக்கில் இந்த வசதி இன்னும் தோன்றவில்லை என்றால் பதற்றமடையத் தேவையில்லை; அது இன்னும் உங்கள் கணக்கிற்கு வராமல் இருந்திருக்கலாம். எனவே செயலியை அப்டேட் செய்து தொடர்ந்து சரிபார்க்கவும்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விதி 14 நாட்கள் வரம்புதான். குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 14 நாட்களுக்கு முன்புவரை மெசேஜ்களை ஷெட்யூல் செய்யலாம். அடுத்த வாரம் வரும் பிறந்தநாளுக்கோ, 14 நாட்களுக்குள் வரும் திருமண நாளுக்கோ எளிதாகச் செட் செய்யலாம். ஆனால், புத்தாண்டு வாழ்த்தை இப்போதே செட் செய்ய முடியாது; ஜனவரி 1 நள்ளிரவுக்கான வாழ்த்தை டிசம்பர் 18-ஆம் தேதி வாக்கில்தான் முன்கூட்டியே பதிவு செய்ய முடியும்.

இந்த வசதி எழுத்து மெசேஜ்களுக்கு மட்டுமல்ல; புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கும் பொருந்தும்; மேலும் இந்த மெசேஜ்கள் முழுமையான எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் (End-to-end encrypted) பாதுகாப்போடு இருக்கும். எனவே, வேடிக்கையான பழைய புகைப்படங்களையும் சரியான நேரத்தில் அனுப்ப முடியும். சோதனையின் போது வெளியான தகவல்களின்படி, அனுப்புபவரின் போன் ஆஃப்லைனில் (Offline) இருந்தாலும் ஷெட்யூல் செய்யப்பட்ட மெசேஜ்கள் தானாகச் சென்று சேரும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், முதலில் சாதாரண மெசேஜ் ஒன்றை வைத்துச் சோதித்துப் பார்ப்பது நல்லது.

மெசேஜ் ஷெட்யூல் வசதி நேரத்தைச் சரியாகக் கையாள உதவுமே தவிர, வாழ்த்தின் அர்த்தத்தை உருவாக்காது. நினைவுகளே நாம் சுமந்து செல்லும் நாட்குறிப்பு என்று ஆஸ்கர் வைல்ட் குறிப்பிட்டதைப் போல, காப்பி செய்யப்பட்ட ஃபார்வர்டு மெசேஜ்களை விட, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எரிந்து போன கேக் போன்ற சொந்த நினைவுகளைக் குறிப்பிடும் வாழ்த்துகளே மனதில் நிற்கும். எனவே, அன்பான வார்த்தைகளை எழுதி, ஷெட்யூல் செய்துவிட்டு நிம்மதியாகத் தூங்கலாம்.