இனி டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது வழங்க வேண்டும்..!!

 
tasmac

சென்னையில் பெரம்பூர், கொளத்துார், மாதவரம் உட்பட, 30 இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில், அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த ஊழியர்கள் மீது, ஊழல் தடுப்புச் சட்டம், சட்ட விரோத பணப் பரி மாற்ற தடை சட்டம் ஆகிய வற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, சென்னை செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் தரப்பில் வழக்கறிஞர் கே.சதீஷ்குமார் ஆஜராகி, ''மனுதாரர் சுட்டிக்காட்டிய கடைகளில், 5 கடைகள் மூடப்பட்டு விட்டன. ''நீதிமன்ற உத்தரவுபடி, மீதமுள்ள கடை களுக்கான இருப்பு மற்றும் விற்பனை பதிவேடு குறித்து, கடை வாரியாக அறிக்கை தாக்கல் செய் யப் பட்டுள்ளது'' என்றார். இதை ஆய்வு செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: டாஸ்மாக் கடைகளில், ரசீது புத்தகங்கள் பராமரிக்கப்படாததும், நுகர்வோருக்கு ரசீதுகள் வழங்கப்படாததும் தெரியவருகிறது.

எனவே, தமிழகம் முழுதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், ரசீது புத்தகங்களை, டாஸ்மாக் நிர்வாகம் பராமரிக்க வேண்டும். இது தொடர்பாக தகுந்த அறிவுறுத்தல்களை, டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து கடைகளுக்கும் வழங்க வேண்டும். இதேபோல், நுகர்வோர் வாங்கும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது கொடுக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை, டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை, நாளை தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.