இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும் சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்களிடம் மனுக்கள் பெறப்படும் - அமைச்சர் ராஜேஷ்குமார்..!

 
11

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் குறைகளை கேட்கும் பணியினை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் இன்று நடைபெற்றது. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடமிருந்து மனு பெறக்கூடிய நிகழ்வு நடைபெற உள்ளது.

அத்துடன், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்து நேரடியாக அவர்களிடம் கேட்டறிய உள்ளோம். மாதத்தில் இருமுறை வருவாய் மாவட்டங்களுக்கு சென்று அங்கும் காங்கிரஸ் தொண்டர்கள் நிர்வாகிகளை சந்திக்க உள்ளோம். அணு கனிம சுரங்கம் தோண்டுவதற்கான ஒப்பந்தம் ஓராண்டு காலம் நீட்டித்திருப்பது, திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம்.

அப்போது நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். இதற்கு கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தேன். பலமுறை சம்பந்தப்பட்ட அமைச்சர் துரைமுருகனை சந்தித்து வலியுறுத்தினேன். அப்போது, மக்களை பாதிக்கும் திட்டங்களை நாங்கள் அமல்படுத்த மாட்டோம் என்று அவர் கூறினார்.

ஆனால், அந்தத் திட்டத்தை அவர் தான் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்துள்ளார். எந்த ஒரு திட்டத்தை தொடங்குவதற்கு முன்பாகவும் மக்களிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் அதனை மத்திய அரசு செய்வதில்லை. நாங்கள் முதலமைச்சரை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்துள்ளோம்.

அவர் கனிவோடு எங்கள் கோரிக்கையை கேட்டார். இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்று விசாரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மக்களை பாதிக்கும் திட்டத்தை கூட்டணி அரசு ஒருபோதும் செயல்படுத்தாது என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்" என்றார்.

தொடர்ந்து மேகதாது விவகாரம் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், "மேகதாது விவகாரத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தமிழகத்தின் உரிமையை நிச்சயமாக விட்டுக்கொடுக்கமாட்டோம். சட்டத்தின் படி கர்நாடகா அரசால் அணை கட்ட முடியாது. பாமக தலைவர் அன்புமணி, அந்தமானோடு ஒப்பிட்டு மேகதாது விவகாரத்தை பேசுவது பொருந்தாத ஒன்று.

மேலும், மேகதாது விவகாரம் தொடர்பாக விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு ராகுல் காந்தி பிரதமராக வந்தால் மட்டுமே தீர்வு காண முடியும். அதனை நோக்கி எங்களுடைய பயணம் இருக்கும்" என தெரிவித்தார்.