பிறந்த குழந்தைகள் முதல் 17 வயது வரை... அமெரிக்க விசா நேர்காணல் விதிமுறையில் பெரிய மாற்றம்..!
பிறந்த குழந்தைகள் முதல் 17 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகள், அமெரிக்க விசா நேர்காணலுக்கு பெற்றோர்கள் உடன் கட்டாயம் வரவேண்டும் என இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களின் நேர்காணலில் பெற்றோர்கள் மட்டும் சென்று விண்ணப்பத்தை சமர்ப்பித்து வந்த நிலையில், விதிமுறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரகம் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் பகிர்ந்த “விசா ஃப்ரைடே” (Visa Friday) வீடியோவின் மூலம் இந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.
தங்கள் குழந்தைகளுக்கு அமெரிக்கா விசா விண்ணப்பிக்கும் பெற்றோர்கள் மட்டும் தனியாக விசா நேர்காணலுக்குச் செல்ல முடியாது. பிறந்த குழந்தையாக இருந்தாலும் சரி, அல்லது 17 வயது நிரம்பிய சிறுவனாக இருந்தாலும் சரி, அனைத்துச் சிறுவர்களையும் விசா அதிகாரியின் முன் நேரில் ஆஜர்படுத்த வேண்டும்.
அனைவருக்கும் ஒரே விதி: விசா வழங்கும் நடைமுறையின் போது ஒவ்வொரு விண்ணப்பதாரரையும் விசா அதிகாரி நேரில் பார்க்க வேண்டும் என்பது கட்டாய விதியாகும்.
எல்லைப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு
விசா நேர்காணல் என்பது அமெரிக்க விசா நடைமுறையின் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். அமெரிக்காவின் எல்லைப் பாதுகாப்பு, தேசியப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காகவே இந்த நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை தேசியப் பாதுகாப்புத் தரநிலைகளைப் பராமரிப்பதில் உறுதியாக உள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. எனவே, குழந்தைகளுக்கு விசா விண்ணப்பிக்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், குழந்தைகளை நேர்காணலுக்கு அழைத்துச் செல்வதை முன்கூட்டியே திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

