மாமண்டூர் தொடங்கி மதுராந்தகம் வரை; விஜய் ரோடு ஷோ ஊர்கள் முழு விவரம்..!!

 
Vijay

த.வெ.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் கடந்த 25-ம் தேதி பிரசாரம் செய்தார். இந்நிலையில், த.வெ.க வேட்பாளர் மரகதம் குமாரவேலை ஆதரித்து மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் இன்று (வெள்ளிக்கிழமை) பிரசாரம் செய்ய உள்ளார்.  

 

இந்த நிலையில், வெள்ளிக் கிழமை முதல்வர் விஜய் ரோடு ஷோ நடத்தும் ஊர்களின் முழு விவரம் குறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பகிர்ந்துள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:

 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் நாளை மதியம் 2.30 மணி அளவில் மாமண்டூரில் தொடங்கி சாலை வழியாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களுக்காக பொதுமக்களிடையே வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கின்றார். அவரது ரோடு ஷோ பின்வரும் வழித்தடத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

மாமண்டூர் , புக்கத்துறை சந்திப்பு, படாளம் சந்திப்பு, ஜானகிபுரம் சந்திப்பு, மேலவலம்பேட்டை சந்திப்பு, கருங்குழி சந்திப்பு, கருங்குழி பேரூராட்சி அலுவலகம், மதுராந்தகம் North By Pass Entrance, மதுராந்தகம் South By Pass, அய்யனார் கோவில் சந்திப்பு, மோச்சேரி, தண்டலம், பெரும்பாக்கம், கிளியாநகர், செம்பூண்டி, கீழாமூர், பசுவங்கரணை, ராமாபுரம், மோகல்வாடி, எலப்பாக்கம், பொற்பணங்கரணை, அணைக்குன்றம், கீழ்அத்திவாக்கம், மின்னல் சித்தாமூர், பெரும்பேர்கண்டிகை, கடமலைப்புத்தூர், தென்பாக்கம் சந்திப்பு, சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் சந்திப்பு, சரவம்பாக்கம், பெருவெளி, முதுகரை, வில்லவராயநல்லூர், மாம்பாக்கம், மதுராந்தகம்.

காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக யாரும் வாகங்களை நிறுத்துவதோ அல்லது வந்து செல்வதோ, கண்டிப்பாகக் கூடாது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர் அவர்களின் மதுராந்தகம் தொகுதி சாலைவலத்தின்போது, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை.

இந்த சாலைவலத்தில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சாலைவலத்தில் கலந்துகொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளவர்கள் அனைவரும், இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, சாலைவலம் வெற்றிகரமாக நடைபெற முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்து இருக்கிறார்.