காரைக்குடி இளைஞரை காதலித்து கரம்பிடித்த பிரான்ஸ் நாட்டு பெண்..
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர், காரைக்குடி சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து கரம் பிடித்திருக்கிறார்.

காரைக்குடியில் உள்ள அமராவதி புதூரை சேர்ந்தவர்கள் தங்கராஜ்- மாணிக்கவல்லி தம்பதியினர். இவர்களது மகன் கலைராஜன் . தங்கராஜ் பிரான்ஸ் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். அவரது மகனும் பிரன்சிலேயே உயர்க்கல்வி பயின்றிருக்கிறார். கலைராஜன் பிரான்சில் உள்ள கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்து கொண்டிருந்தபோது, அதே கல்லூரியில் சைக்காலஜி படித்துக்கொண்டிருந்தவர் கயல்.. பெயரைக் கேட்டதும் தமிழ் பெயராக இருக்கிறதே, தமிழ் பெண் தானோ என்று எண்ணிவிட வேண்டாம். ஜான் லூயிக் - வெரோனிக் என்னும் பிரான்ஸ் நாட்டு தம்பதியின் மகள் தான் கயல்..

கலைராஜனும், பிரான்ஸ் பெண் கயலும் நண்பர்களாக பழகி வந்துள்ள நிலையில், நாளடைவில் அவர்கள் நட்பு காதலாக மலர்ந்துள்ளது. மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி, தங்கள் விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்து முறைப்படி திருமணம் முடித்து இருக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதி புதூரில் உள்ள கலைராஜனின் சொந்த கிராமத்து வீட்டில், அவர்களது திருப்பனம் வெகு சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த திருமணத்தில் பிரான்ஸ் பெண் கயலின் பெற்றோர், சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினரும், கலைராஜன் உறவினர்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.


