ராக் ஆன் ஹாரிஸ் 2.0 கச்சேரிக்கு செல்பவர்களுக்கு கட்டணமில்லா மெட்ரோ சேவை!

 
metro

ராக் ஆன் ஹாரிஸ் 2.0 கச்சேரிக்கு வருபவர்களுக்கு தடையில்லா மெட்ரோ பயணம் வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சென்னை, நந்தனம் YMCA மைதானத்தில், நாளை 03.02.2024 “Rock on Harris 2.0 -இன்னிசை கச்சேரி” நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு நிறுவனமான Noise and Grains Private Limited உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது.  Noise and Grains Private Limited ஆனது 'ராக் ஆன் ஹாரிஸ் 2.0 நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு தனிப்பட்ட மெட்ரோ பாஸ்களை கூடுதல் கட்டணமின்றி வழங்குகிறது.

metro

இது அவர்கள் அருகில் உள்ள மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்குச் சென்று நிகழ்ச்சியை கண்டுகளித்து மெட்ரோ வழியாக அவர்கள் இடத்திற்கு திரும்புவதற்கு உதவும். இந்த சிறப்பு மெட்ரோ பாஸ்களை ஒரு சுற்றுப் பயணத்திற்குப் பயன்படுத்தலாம் (2 நுழைவு & 2 வெளியேறு). மெட்ரோ நிலையங்களில் உள்ள தானியங்கி வாயில்களில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் மெட்ரோ பாஸ்களை ஸ்கேன் செய்யலாம். நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் கவனத்திற்கு, நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி இரயில் 23:17 மணிக்கும், விமானநிலைய மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி இரயில் 23:37 மணிக்கும் புறப்படும். 

பயணிகள் கடைசி இரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே நந்தனம் மெட்ரோ இரயில்நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பச்சை வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் சென்னை சென்ட்ரல் மற்றும் ஆலந்தூரில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த பிரத்யேக சலுகையைப் பயன்படுத்தி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்று, தடையில்லா பயணத்தை அனுபவிக்கும்படி சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும், மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் இதுபோன்ற ஒத்துழைப்பை வழங்க சென்னையில் உள்ள மற்ற பெரிய நிகழ்வு அமைப்பாளர்களையும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அழைக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.