ஆன்லைனில் ஆர்டர் செய்ததால் விபரீதம்! ரூ.1.75 அபேஸ் செய்த இருவர் கைது

 
மோசடி

இணையதள செயலி மூலம் மோசடி செய்த  வழக்கில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார்  கைது செய்தனர். 

Top 10 Tips for Preventing Internet Fraud - GDPR Informer

புதுச்சேரி அடுத்த துத்திப்பட்டு பகுதி கடப்பேரிகுப்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசர்மா (39). காவலாளி. இவர் கடந்த 2022 ம் ஆண்டு டிசம்பரில் இணைய செயலி மூலம் வீட்டுக்கான பொருள் வாங்க முயற்சித்தார். ஆனால், பொருள் அவருக்கு கிடைக்கவில்லை. அதுகுறித்து விசாரிக்க வாடிக்கையாளர் சேவை பிரிவை இணையத்தில் தேடியுள்ளார். அப்போது குறிப்பிட்ட கைபேசி எண் கிடைத்துள்ளது. 

அதில் பேசிய மர்மநபர், கிருஷ்ணசர்மா தனது விவரங்களை குறிப்பிட்ட செயலியில் பதிய கூறியுள்ளார். அதன்படி கிருஷ்ணசர்மா பதிந்த நிலையில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.75 லட்சம் மர்மநபர்களால் அபகரிக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் கிருஷ்ணசர்மா புகார் அளித்தார். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அசாமுதீன் அன்சாரி (30), மகேஷ்குமார் (28) ஆகியோர் வங்கிக் கணக்கில் கிருஷ்ணசர்மாவின் பணம் செலுத்தப்பட்டது தெரியவந்தது. 

arrest

தொடர் விசாரணையில் அசாமுதீன் அன்சாரி, மகேஷ்குமார் இருவரும் சென்னை ஓரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தது கண்டறியப்பட்டது. அதையடுத்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் சென்னை ஓரகடம் பகுதிக்கு சென்று அசாமுதீன் அன்சாரி, மகேஷ்குமார் இருவரையும்  கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 ஏடிஎம் கார்டுகள், 2 கைபேசிகள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் தங்களது வங்கிக் கணக்கை ஜார்கண்டில் உள்ள ஒருவரிடம் அளித்துள்ளதாகவும், அதற்காக தங்களுக்கு கமிஷன் கிடைக்கும் என்றும், ஆகவே பணம் தங்களது வங்கிக்கணக்குக்கு எப்படி பரிமாற்றப்படுகிறது என தெரியாது என்றும் கூறியுள்ளனர். கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் கூறுகையில், போலியான ஆப்பை உருவாக்கி அதன் மூலம் வங்கி கணக்கு தகவல்கள் பெற்று லட்சக்கணக்கில் பணத்தை திருடியுள்ளனர். பல மாநிலங்களுக்கு மாறி மாறி சென்று கொண்டிருந்தவர்களை, சென்னையில் கைது செய்தோம். இதில் மிகப்பெரிய நெட்வொர்க் உள்ளது. அதில்  இருவரை பிடித்துள்ளோம். தெரியாத நபர்களிடம் ஆதார் ஒடிபி மற்றும் வங்கி அட்டை விவரம் தெரிவிக்காதீர்கள். மக்கள் ஆசையால் செய்யும் சிறு தவறு பல லட்சம் இழப்புக்கு காரணமாகிவிடுகிறது என்றார்.