இன்னொரு ஜென்மம் எடுத்த 4 உயிர்கள்! கடைக்குள் பாய்ந்த கார்...!!

 
1

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மன்னார்க்கோணம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோரக் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில், கைக்குழந்தை உட்பட 4 பேர் மயிரிழையில் உயிர் தப்பினர்.

 

நெடுமங்காடு - விதுரா சாலையில் மன்னார்க்கோணத்தில் உள்ள மக்கள் நூலகம் (People's Library) எதிரே பிற்பகல் சுமார் 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஒரு குடும்பத்தினர் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த கடைக்குள் வேகமாகப் புகுந்து மோதியது.

 

விபத்து நடந்த நேரத்தில், கைக்குழந்தையை வைத்திருந்த ஒரு பெண்ணும், அவருடன் மேலும் இருவரும் அந்தக் கடையின் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர். கார் அதிவேகமாகக் கடைக்குள் பாய்ந்தபோதிலும், நூலிழையில் அவர்கள் மீது மோதாமல் விலகிச் சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்தில் காரில் பயணித்த குடும்பத்தினருக்கோ அல்லது கடையின் அருகே நின்றிருந்த 4 பேருக்கோ எவ்விதக் காயமும் ஏற்படவில்லை. அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், விபத்தில் கடையின் முன்பகுதியும் காரும் சேதமடைந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.