"ராமதாஸ்தான் இயக்கத்தின் நிறுவனர், தலைவர்" - பாமக தலைமை அறிக்கை
மருத்துவர் அய்யாவே இயக்கத்தின் நிறுவனர், தலைவர் என்பதை விலகி நிற்கும் ஓரிருவரும் புரிந்து கொள்ள இந்த பிறந்தநாள் வாழ்த்தளிப்பு ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது என பாமக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பாமக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவர் அய்யா அவர்கள் பிறந்தநாளில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி! பா.ம.க. நிறுவனர் - தலைவர், மருத்துவர் அய்யா ச.இராமதாசு அவர்களின் பிறந்த நாளுக்கு மாண்புமிகு இந்திய பிரதமர் திரு.நரேந்திரமோடி, இந்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா, பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் - சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு ஜெ.பி. நட்டா, இந்திய நிதித்துறை அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீத்தாராமன், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிசாமி, திராவிடர் கழக பொதுச்செயலாளர் பெரியவர் அய்யா கி.வீரமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமிகு சீமான் மற்றும் பல்வேறு துறைகளின் பேராளர்கள், கலைத்துறையினர், கல்வியாளர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பாட்டாளி சொந்தங்கள், பா.ம.க.வினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவ்வாறு வாழ்த்தியோர் அனைவருமே, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் - தலைவர் என்றே 'அய்யா' வைக் குறிப்பிட்டு வாழ்த்தியிருந்ததை காணும் போது இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தோம். எப்போதுமே எங்கள் வழிகாட்டியாக, எங்களை வழி நடத்துகின்ற அய்யாவின் வசிப்பிடமான தைலாபுரமே பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரே தலைமையகம். மருத்துவர் அய்யாவே இயக்கத்தின் நிறுவனர் - தலைவர் என்பதை விலகி நிற்கும் ஓரிருவரும் புரிந்து கொள்ள இந்த பிறந்தநாள் வாழ்த்தளிப்பு ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.


