சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் பந்தயம்.. 2 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு..
சென்னையில் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஃபார்முலா -4 கார் பந்தயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர ஃபார்முலா-4 கார் பந்தயத்தை சென்னை தீவுத்திடல் பகுதியில் நடத்தப்படவுள்ளது. முன்னதாக இந்த கார் பந்தயமானது கடந்த டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்பு காரணமாக ஃபார்முலா 4 கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே சென்னை மாநகருக்குள் கார் பந்தயத்தை நடத்த தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. சட்டப்பூர்வமாக அனுமதி பெறாமல், தனியார் நிறுவனம் இந்த பந்தயத்தை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது விளக்கமளித்த தமிழக அரசு, “மழை, வெள்ளம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த பார்முலா 4 கார் பந்தயத்தை ஜூன் மாதத்துக்குப் பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பந்தயத்துக்காக ராணுவம் மற்றும் கடற்படையிடம் இருந்தும் தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளது.
ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து பந்தய வழித்தடம் 100 மீட்டர் தூரத்தில் உள்ளதால், அந்த இடத்தை கார்கள் கடக்கும்போது ஒலி கட்டுப்பாடு கடைபிடிக்கப்படும். இதற்கு மருத்துவமனை தரப்பிலும் அனுமதி பெறப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியிருக்கும் 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஆக்ஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய ட2 நாட்களில் ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடைபெறவுள்ளது.