நிபா வைரஸ் - உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த விஜயபாஸ்கர் வலியுறுத்தல்

 
vijayabaskar

நிபா வைரஸ் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளர்.
 
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கானோருக்கு அங்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதன் காரணமாக கேரளாவில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டு பேர் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் வைரஸ் பரவுவதைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களின் சோதனை சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிர படுத்த சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் முழுமையான காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தமிழ்நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், நிபா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளர். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,  தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், நமது அண்டை மாநிலமான கேரளாவில் #நிபா வைரஸுடன் தொடர்புடைய இரண்டு இறப்புகள் கவலையளிக்கின்றன. இது காற்றில் பரவவில்லை என்றாலும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவக்கூடிய மிகவும் தொற்றுநோயாகும். கேரள எல்லையில் உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவது மிக முக்கியமானது. இதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவும், அறிகுறிகளைப் பற்றி பொதுமக்களுக்கு அறிவுறுத்தவும் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.