எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது - செங்கோட்டையன்

 
Sengottaiyan

தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த, அமமுக நிர்வாகியை இபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக  எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இதனைக்கண்டித்து அதிமுக சார்பில் மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றன. 

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அவருக்கு முழு பாதுகாப்பு கொடுத்து இருந்தால் இது போன்ற சம்பவம் நிகழ்ந்து இருக்காது. பாதுகாப்பு அளிப்பதை விட்டுவிட்டு அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு இருப்பது கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.