சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் தேசிய நலன் கருதி பாஜக கூட்டணி தொடரும் - கே.பி.முனுசாமி

 
kp munusamy

கூட்டணி கட்சிகளுக்குள் சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் தேசிய நலன் கருதி பாஜக கூட்டணி தொடரும் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். 

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் கட்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:- மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார். அந்த அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் பெற்று மாவட்ட அளவில் இருக்கின்ற மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் செயல்படக்கூடிய உத்வேகத்தை அவர்களுக்கு அளித்திருக்கிறார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார். தேர்தலில் கடுமையாக பாடுபட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள், தலைமை நிலைய செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார். கூட்டணி கட்சிகளுக்குள் சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் தேசிய நலன் கருதி இந்த கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்று முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். அதன்படி அவர் செயல்படுவார். அவருக்கு பின்னால் நாங்கள் இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.