முன்னாள் அமைச்சர் கே.என். நேருவிற்கு தொடர்புடைய 25 இடங்களில் மீண்டும் ரெய்டு..!!

 
Q

திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேருவிற்கு சொந்தமான திருச்சி தில்லை நகரிலுள்ள இல்லத்தில், இன்று (அக்டோபர் 29) காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, இன்று காலை 3 வாகனங்களில் வருகை தந்த 15-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், தில்லை நகரிலுள்ள முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் வீடு மற்றும் அலுவலக வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தீவிர சோதனையைத் தொடங்கியுள்ளனர்.

மேலும், சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கே.என். நேருவிற்கு சொந்தமான சுமார் 25க்கும் மேற்பட்ட இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது இல்லத்தைத் தொடர்ந்து, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கே.என். நேருவின் சகோதரரும், டிவிஎச் பில்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான கே.என். ரவிச்சந்திரனின் வீட்டிலும், அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதற்கு முன்னதாக, கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி, டெண்டர் முறைகேடு தொடர்பான புகாரின் அடிப்படையில் ரவிச்சந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 241 ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது பணி நியமன முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. சோதனை நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் அல்லது பிற பொருள்கள் தொடர்பான விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.