வருமான வரித்துறையை சோதனை செய்ய விடாமல் தடுப்பது விதிமீறல் - ஜெயக்குமார் பேட்டி

 
jayakumar

வருமான வரித்துறையினர் புகாரின் பேரில் சோதனை செய்வது அவர்களுடைய கடமை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  செந்தில் பாலாஜி வீடு,  அவரது சகோதரர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடியாக இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ,கரூர் , பெங்களூரு , ஹைதராபாத் உள்ளிட்ட  இடங்களில் சோதனை நடைபெற்ற வரும் நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில் கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

இந்த நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;  வருமான வரி சோதனை செய்வது வருவான வரித்துறையினரின் கடமை. வருமான வரித்துறைக்கு அரசியல் வாதியோ, நடிகரோ, தொழிலதிபரோ வித்தியாசம் இல்லை. அவர்களை சோதனை செய்ய விடாமல் தடுப்பது அரசமைப்பு விதிமீறல். கடந்த 2 ஆண்டுகளில் ஊழல் திமிங்கலங்கள் அதிகம் உள்ளனர். பணக்கார குடும்பத்தை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.