இடைத்தேர்தலில் அதிமுகவை கண்டு திமுக பயந்தது - ஜெயக்குமார் பேட்டி

 
jayakumar

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை கண்டு திமுக பயந்தது எனவும், அதனால் தான் 350 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து போலியான வெற்றியை பெற்றுள்ளது எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். 
அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 8 ஆயிரத்து 474 வாக்குகளும் பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜ் 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்றிருந்தார். த.மா.கா வேட்பாளர் யுவராஜைவிட தற்போது 15 ஆயிரம் வாக்குகள் குறைவாக அதிமுக வேட்பாளர் தென்னரசு பெற்றுள்ளார். வெற்றி வித்தியாசத்தைவிட அதிமுக வேட்பாளர் பெற்ற ஒட்டுமொத்த வாக்குகள் குறைவாக உள்ளது. அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள மேற்கு மண்டலத்திலேயே தென்னரசு பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைத்தும் மொத்தம் பதிவான வாக்குகளில் பாதியை கூட பழனிசாமி தரப்பால் பெற முடியவில்லை. 

இந்நிலையில், இடைத்தேர்தல் முடிவு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:  அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். வரும் காலங்களில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும். அதிமுகவை பொறுத்தவரை கட்சி எழுச்சியாகவே உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை கண்டு பிற கட்சிகள் பயந்தன. எந்த தேர்தலிலும் இதுபோல திமுக பயந்ததது கிடையது. திமுக 350 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து போலியான வெற்றியை பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் பணம் பாதாளம் வரை பாய்ந்ததுள்ளது.