வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிட மாட்டேன் - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா..!!
காங்கிரஸ் மூத்த தலைவரான சித்தராமையா, 2023ம் ஆண்டு முதல் கர்நாடக முதல்வராக பதவி வகித்து வந்தார்.
அவருக்கும், சிவக்குமாருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர், முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலகினார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சித்தராமையா பேசியதாவது: இன்றைய அரசியல் களம் ஊழல்மயமானதாக மாறிவிட்டது.
வரும் 2028 ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். ஆனால், அரசியலில் நீடிப்பேன். மக்களின் குரலாக ஒலிப்பேன். வருணா தொகுதி மக்கள் என்னை மீண்டும் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால், இனிமேல் தேர்தலில் போட்டியிடக் கூடாது என முடிவு செய்துவிட்டேன். கடந்த காலங்களில் போட்டியிட்ட போது, இத்தொகுதி மக்கள் தேவையான பணம் கொடுத்ததுடன், வெற்றியையும் உறுதி செய்தனர்.
ஆனால், தற்போது அது போன்ற சூழ்நிலை இல்லை. எனக்கு 79 வயதாகிவிட்டது. எங்களது அரசுக்கு இன்னும் 1.5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. அது முடியும்போது எனது வயது 81 - 82 ஆக இருக்கும். முன்பு போல் உற்சாகமாக பணியாற்றக்கூடிய வாய்ப்பு இருக்காது.
வரும் தேர்தலில் நான் போட்டியிட்டால், மக்களுக்கு நான் பணம் கொடுக்க வேண்டி இருக்கும். இன்றைய அரசியல் ஊழல் மயமானதாக மாறிவிட்டது. நேர்மையான அரசியல் வாயிலாக நிலைக்க முடியாது. இதன் காரணமாக வரும் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.

