இந்திய 'ஏ' அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி நியமனம்!

 
1

இந்தியா ஏ அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி நியமனம். 

ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு எதிராகத் தாயகத்தில் நடைபெறவுள்ள முக்கிய கிரிக்கெட் தொடருக்கான இந்திய 'ஏ' அணியின் தலைமைப் பயிற்சியாளராக (Head Coach) முன்னாள் இந்திய வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் பந்துவீச்சாளருமான லக்ஷ்மிபதி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

மூத்த இந்திய தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முதன்மை தேசிய அணிப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், பாலாஜி இளம் இந்திய வீரர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை ஏற்கவுள்ளார். தமிழக அணி மற்றும் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகப் பயிற்சியாளராகச் செயல்பட்ட அனுபவம் கொண்ட பாலாஜியின் நியமனம் இளம் வீரர்களுக்குப் பெரும் பலமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இத்தொடருக்கான சிவப்புக் பந்து (டெஸ்ட்) இந்திய 'ஏ' அணியில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் திரிபுரானா விஜய் (Tripurana Vijay) புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். லெக் ஸ்பின்னர் விப்ராஜ் நிகமிற்குப் பதிலாக இவர் அணியில் இடம்பெற்றுள்ளார். தனுஷ் கோட்டியான் மற்றும் சாம்ஸ் முலானி ஆகியோருடன் இணைந்து திரிபுரானா விஜய் இந்திய 'ஏ' அணியின் சுழற்பந்து வீச்சைத் தலைமை தாங்குவார்.

முன்னதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விப்ராஜ் நிகம், இந்திய 'ஏ' ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்தார். இருப்பினும், மூத்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட விலா எலும்புத் தசைப்பிடிப்பு (Side strain) காயம் காரணமாக, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான மூத்த இந்திய அணியில் வருணுக்குப் பதிலாக விப்ராஜ் நிகம் முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாகவே இந்திய 'ஏ' அணியில் திரிபுரானா விஜய்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இத்தொடர் புதுச்சேரியில் உள்ள எழில்மிக்க 'கேப்-சீசம்' (CAP-Siechem) மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2019-ஆம் ஆண்டு பி.சி.சி.ஐ-யின் (BCCI) முழுநேர உறுப்பினராகப் புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் (CAP) அங்கீகரிக்கப்பட்ட பிறகு, முதன்முறையாக ஒரு சர்வதேச அளவிலான "ஏ" இருதரப்புத் தொடரை முழுமையாகத் தொகுத்து வழங்குவது இதுவே முதல்முறையாகும்.

போட்டி அட்டவணை விவரங்கள்:

இந்தியா 'ஏ' மற்றும் ஆஸ்திரேலியா 'ஏ' அணிகளுக்கு இடையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொடர் செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் இரண்டு 4-நாள் போட்டிகளும் (Unofficial Tests), அதனைத் தொடர்ந்து மூன்று 50-ஓவர் ஒருநாள் போட்டிகளும் நடைபெறவுள்ளன.