தாராபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. உடல்நலக்குறைவால் காலமானார்
தாராபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை தாராபுரம் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தவர். இவருக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது உடனடியாக உறவினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் கடந்த 1961-தாராபுரம் அருகே உள்ள வீராச்சிமங்கலம் கிராமத்தில் பிறந்தவர் சிறு வயதிலிருந்து காங்கிரஸ் கட்சியின் மீது ஆர்வம் கொண்டு இவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உறுப்பினரானார். மேலும் இவரது மறைவுக்கு தாராபுரம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த அனைத்து கட்சி நிர்வாகிகளும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இவரது உடல் சொந்த ஊரான தாராபுரத்தை அடுத்த வீராச்சிமங்கலம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
காளிமுத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மாணிக்கம்தாகூர் எம்பி, “தாராபுரம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான ,அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான திரு. வி.எஸ். காளிமுத்து அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். சிறு வயது முதல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தாராபுரம் பகுதிகளில் ஊராட்சியில் தொடங்கி சட்டமன்ற வரை பல்வேறு பணிகளை செய்து கட்சி வளர்ச்சிக்கு பெரிதும் உழைத்தவர். மிகவும் எளிமையானவர். அன்னாரின் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மிகப்பெரிய இழப்பு.அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இயக்க நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

