முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் அமைச்சர்களுக்கு பயிற்சி வகுப்பு: தவெக திட்டம்..!
த.வெ.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
முதல்வர் விஜய் இன்னும் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்காமல் இருக்கிறார். ஆனால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பேட்டி கொடுக்க, தலைமையில் இருந்து எவ்வித தடையும் இல்லை. எனினும், அமைச்சர்கள் சிலர், துறை சார்ந்த விபரம் கூட தெரியாமல் பேட்டி கொடுத்து, சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகின்றனர்.துறை ரீதியிலான அனுபவம் இல்லாததால், ஆய்வு கூட்டங்களிலும் அமைச்சர்கள் பலர் திணறுகின்றனர்.
இதை சரி செய்ய, அ.தி.மு.க., ஆட்சியின்போது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா செய்தது போல, அமைச்சர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுக்க, தலைமை முடிவு செய்துள்ளது.
அதாவது, துறை சார்ந்த வல்லுனர்கள் வாயிலாக, அமைச்சர்களுக்கு துறை ரீதியான தகவல்களை எடுத்து சொல்லவும், அரசின் திட்டங்களை, மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்பது குறித்தும், பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகுப்பு, வாரம் இரு நாட்கள் நடக்க உள்ளது.அதேபோல், செய்தியாளர் சந்திப்பில், துறை சார்ந்த கேள்விகளை தவிர, பொதுவான கேள்விகள் மற்றும் அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவை மீறி, அமைச்சர்கள் செயல்படக் கூடாது என, அறிவுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

