அரசியலில் திடீர் திருப்பம் : முன்னாள் அதிமுக அமைச்சர் பெஞ்சமின் திமுகவில் இணைந்தார்..!

 
1

அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தற்பொழுது திடீரென திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் 2016 சட்டமன்ற தேர்தலில் மதுரவாயில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்று அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

திமுகவில் இணைந்த பெஞ்சமின் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் தொண்டர்களை அரவணைத்து செல்லக்கூடிய மாண்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது. அந்த குணம் தான் என்னை திமுகவில் இணைய செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அதிமுகவில் இருந்தபோது அந்த இயக்கத்திற்கு எவ்வாறு உண்மையாகவும், விசுவாசமாகவும் பணியாற்றினேனோ அதேபோல் இனி திமுகவிற்கும் உழைப்பேன்.

அம்மா (ஜெயலலிதா) மறைவுக்கு பின்னால் அடுத்த தலைமையை ஏற்று நான் நல்ல முறையில்தான் பணியாற்றினேன். ஆனால் இன்று இருக்கக்கூடிய அரசியல் சூழல், தொடர்ச்சியாக மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கம் ஆகிய காரணங்களால் நான் தற்போது திமுகவில் இணைந்துள்ளேன். அதிகார மையத்தை நோக்கி நான் செல்ல வேண்டும் என்றால் சென்றிருக்கலாம். ஆனால் திமுக தலைவரும், இளைஞர் அணி தலைவரும் தொண்டர்களை வழிநடத்தக் கூடிய விதம் என்னை கவர்ந்துள்ளது. அதனால் தான் திமுகவில் இணைந்துள்ளேன்" என்றார்.