“ஈபிஎஸ் முதலமைச்சர் ஆகக்கூடாது என்பதே ஓ.எஸ்.மணியனின் பிளான்”- அதிமுக நிர்வாகி பரபரப்பு பேட்டி
அதிமுகவில் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று மயிலாடுதுறை அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் வி.ஜி.கே. செந்தில்நாதன். பாரம்பரிய அதிமுக குடும்பத்தை சேர்ந்த இவரின் தந்தை அதிமுகவில் 1972 முதல் பணியாற்றிய நிலையில் தனது 18 வயதில் இருந்து கிளைக் கழகச் செயலாளராக அதிமுக கட்சியில் இணைந்து 20 வருடங்கள் நான்கு முறை ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றியவர். படிப்படியாக உயர்ந்து பல்வேறு பொறுப்புகளில் அங்கம் வகித்தவர் வி.ஜி.கே செந்தில்நாதன். 2021 ஆம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் அதிமுக மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றவர். எந்தவித குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் ஆறு மாதத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டு தூங்குவார் எம்எல்ஏ பவுன்ராஜ் நியமிக்கப்பட்டார் தொடர்ந்து கட்சியில் அவமரியாதை செய்யப்பட்டு வந்தார்.
இந்நிலையில் செந்தில்நாதனுக்கு தேர்தலில் எம்எல்ஏ சீட்டு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி மீண்டும் குத்தாலத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை தொகுதி கூட்டணி கட்சியான பாமகவிற்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.ஜி.கேசெந்தில்நாதன் 35 ஆண்டு காலமாக கட்சியில் பணியாற்றிய வரும் தனக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்றும், முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன், மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் இருவரும் இணைந்து தன்னை பழி வாங்கும் நோக்கத்தில் செயல்படுவதால் குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், கட்சியின் அடிப்படை தொண்டனாக இருந்து உழைப்பதாக தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் கடிதம் அனுப்பி உள்ளதாகவும், முதலமைச்சர் ஆகலாம் என்ற கனவில் இருந்த ஓ.எஸ்.மணியன் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக கூடாது என்ற நோக்கில் டெல்டா மாவட்டங்களில் தோல்வியை தழுவும் வேட்பாளர்களை நியமித்துள்ளதாக வருத்தம் தெரிவித்தார். மேலும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஆகியோரால் கட்சியில் இருந்து மூத்த நிர்வாகிகள் ஓரங்கட்டுப்பட்டு விட்டதாகவும், அதிமுக ரத்தம் உடம்பில் ஓடும் தன்னை போன்றவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்காமல் அவமரியாதை செய்வதை பொதுச் செயலாளர் தெரியப்படுத்தவே பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.

