யூடியூபர் டி.டி.எப். வாசன் விவகாரம்...செல்ல பிராணிகள் விற்பனை கடையில் அதிரடி சோதனை!
யூடியூபர் டி.டி.எப். வாசன் கையில் பாம்பு உடன் வீடியோ வெளியிட்ட விவகாரத்தை அடுத்து, திருவொற்றியூரில் உள்ள செல்லப் பிராணிகள் விற்பனை கடையில் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று அதனை வீடியோ எடுத்து தனது யூட்டியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்து இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் டிடிஎஃப் வாசன். இவர் அதிவேகமாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் வாகனம் ஓட்டியதாக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது. அவ்வபோது வித்தியாசமான வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்து சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். இதனிடையே டிடிஎஃப் வாசன் காரில் பயணிக்கும் போது கையில் பாம்புடன் இருக்கும் வீடியோ வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், யூடியூபர் டி.டி.எப். வாசன் கையில் பாம்பு உடன் வீடியோ வெளியிட்ட விவகாரத்தை அடுத்து, திருவொற்றியூரில் உள்ள செல்லப் பிராணிகள் விற்பனை கடையில் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அரியவகை கிளி மற்றும் ஆமையை கைப்பற்றினர். சில தினங்களுக்கு முன்பு இங்கு, தனது பாம்புக்கு கூண்டு வாங்கிச் சென்றதாகவும், பாம்பும் விற்கப்படுவதாகவும் டி.டி.எப் வாசன் வீடியோவில் கூறியிருந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தினர்.