இத்தகைய சட்டவிரோத செயலை செய்ததற்காக வெளியுறவுத்துறை அமைச்சரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் - செல்வப்பெருந்தகை..!

 
1

இந்தியாவிலேயே பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் மிக அதிக அளவில் வெறுக்கப்படுகிற மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இதை சகித்துக் கொள்ள முடியாமல் ஆதாரமற்ற அவதூறுகளை பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் பரப்பி வருகின்றனர். 1974ம் ஆண்டு இந்திய - இலங்கை நாடுகளுக்கிடையே 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தம் குறித்து உண்மைகளை திரித்து கருத்துகளை கூறி வருகிறார்கள்.

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கும், கச்சத்தீவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்கிற போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. மோடி ஆட்சி அமைந்த 2014 முதல் 2024 வரை 400 படகுகள் பறிமுதலும், 3179 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த 2016 ஆம் ஆண்டு இருநாடுகளுக்கிடையே அமைக்கப்பட்ட கூட்டு நடவடிக்கைக்குழு 2020 ஆண்டிற்கு பிறகு ஒருமுறை கூட கூடவே இல்லை. தமிழக மீனவர்களின் பிரச்சினை தீர்க்க அமைக்கப்பட்ட இக்குழுவை ஒன்றிய பாஜ அரசு ஏன் கூட்டவில்லை ? . கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் கச்சத்தீவை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ?. தமிழக மீனவர்கள் எல்லைகளை பொருட்படுத்தாமல் பாரம்பரியமாக மீன்பிடிக்கிற உரிமையை பெற்றுத் தருவதற்கு கையாலாகாத பாஜ அரசு கச்சத்தீவை பற்றி பேசுவது பிரச்சினையை திசைத் திருப்புகிற செயலாகும். இப்பிரச்சினையில் 10 ஆண்டுகளாக ஒரு துரும்பைக் கூட எடுத்து போடாத ஒன்றிய பாஜ அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பதவி பிரமாணத்தில் எடுத்துக் கொண்ட ரகசிய காப்பு உறுதிமொழியை அப்பட்டமாக மீறுகிற வகையில் கருத்து கூறியிருக்கிறார்.

இத்தகைய சட்டவிரோத செயலை செய்ததற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை குடியரசுத் தலைவர் உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். 10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்பதற்கோ, தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கை, படகுகள் பறிமுதல் செய்வதை தடுத்து நிறுத்த முடியாத பிரதமர் மோடியின் சுயரூபத்தை தமிழக மீனவர்கள் நன்கு அறிவார்கள். எனவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் தமிழக விரோத போக்கிற்கு உரிய பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள். அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக பதவி பிரமாண உறுதிமொழியை மீறிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை குடியரசுத் தலைவர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.