உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்காக ஏசி ஓய்வு அறை- சென்னை மாநகராட்சி அசத்தல் திட்டம்

உணவு மற்றும் இ- காமர்ஸ் நிறுவனங்களில் டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்காக நகரின் முக்கிய சாலைகளில் ஏசி ஓய்வு அறைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
உணவு மற்றும் இ- காமர்ஸ் நிறுவனங்களில் டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்காக நகரின் முக்கிய சாலைகளில் ஏசி ஓய்வு அறைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி சோதனை முறையில் சென்னை அண்ணா நகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி. நகர் போன்ற பகுதிகளில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறைகள் அமைக்கப்படவுள்ளன. இதனால் பெண் தொழிலாளர்கள் அதிகம் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது.
துபாயில் இருப்பது போன்று சாலையோரங்களில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறைகள் அமைக்கப்படவுள்ளன. தற்போது உணவு மற்றும் இ- காமர்ஸ் நிறுவனங்களில் டெலிவரி செய்யும் தொழிலாளர்கள், அடிப்படை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எதுவுமின்றி, அண்ணாமலை இரண்டாவது அவென்யூ, காதர் நவாஸ் கான் சாலை, உத்தமர் காந்தி சாலை மற்றும் ராயப்பேட்டை ஹை ரோடு போன்ற முக்கியமான சாலைகளில் அதிகளவில் கூடுகிறார்கள். மழை மற்றும் கோடைக்காலங்களில் இவர்களின் நிலை மிகவும் மோசமாகிறது.
உணவு மற்றும் இ- காமர்ஸ் நிறுவனங்களில் டெலிவரி செய்யும் தொழிலாளர்களில் சுமார் 10சதவீதம் பேர் பெண்களாவர். இவர்களுக்கு பல இடங்களில் கழிப்பறை வசதி கிடைப்பதில்லை. ஆகவே பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், அவர்களுக்கு அத்தியாவசிய சேவை வழங்கும் விதமாகவும், ஏசி ஓய்வு அறைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.