இந்திய வரலாற்றில் முதல்முறை: தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க 193 எம்பிக்கள் கையெழுத்து..!
பாஜக ஆளாத மாநிலங்களில் "வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்" என்ற பெயரில் தகுதியான வாக்காளர்கள் நீக்கப்படுவதாக இந்தியா கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பெரிய அளவில் 'வாக்கு திருட்டு' நடந்துள்ளதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் மீது நேரடிப் புகாரை முன்வைத்துள்ளார்.
குறிப்பாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தற்போது தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இந்த அரசியல் நெருக்கடிக்கு இடையே, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தீர்மான நோட்டீஸ் தயாரித்துள்ளன. இதில் 130 மக்களவை உறுப்பினர்களும், 63 மாநிலங்களவை உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளதோடு, தேர்தல் ஆணையர் மீது 7 முக்கியக் குற்றச்சாட்டுகளையும் அடுக்கியுள்ளனர்.
பதவியில் பாரபட்சம் காட்டியது, தேர்தல் மோசடி குறித்த விசாரணையைத் தடுத்தது மற்றும் மக்களின் அடிப்படை வாக்குரிமையைப் பறித்தது போன்ற தீவிரமான புகார்கள் அந்த நோட்டீஸில் இடம்பெற்றுள்ளன. நாட்டின் உயரிய பதவியில் இருக்கும் ஒருவரை நீக்குவது என்பது சாதாரணமான காரியம் அல்ல; இது உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்குவதற்கு இணையான கடினமான நடைமுறைகளைக் கொண்டது.
விதிமுறைகளின்படி, இத்தகைய தீர்மானத்திற்கு மக்களவையில் 100 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 50 எம்.பி.க்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். தற்போது எதிர்க்கட்சிகள் திரட்டியுள்ள கையெழுத்துக்கள் இந்தத் தேவையை விட அதிகமாக உள்ளதால், இந்த நோட்டீஸை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் அவைக்கு வந்தவுடன், சபாநாயகர் புகார்களில் முகாந்திரம் இருப்பதை உறுதி செய்தால் மட்டுமே விசாரணைக் குழு அமைக்கப்படும். இருப்பினும், தற்போதைய நிலையில் இரு அவைகளிலும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே மெஜாரிட்டி பெற்றுள்ளதால், இந்தத் தீர்மானம் வெற்றி பெறுமா அல்லது நீர்த்துப் போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய ஜனநாயக வரலாற்றிலேயே ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அனுப்பப்படுவது இதுவே முதல் முறையாகும். தேர்தல்கள் நெருங்கும் வேளையில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை, தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாற்றியுள்ளது.

