வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்..!
ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், வங்கதேச அணி டாஸ் வென்ற போதிலும், பாகிஸ்தானை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது.
பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் பர்வேஸ் ஹொசைன் எமான் ரன்கள் ஏதுமின்றியும், தாவ்ஹித் ஹிரிடோய் 5 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து சைஃப் ஹொசைன் 18, மஹெதி ஹசன் 11, நுருல் ஹசன் 16 ரன்களில் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கும் பாகிஸ்தான் அணி முன்னேறியுள்ளது.
இதனையடுத்து செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்து பாகிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதன் மூலம் ஆசிய கோப்பை தொடர் வரலாற்றில் இரு அணிகளும் முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளன.

