21 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக...தேமுதிகவின் முதல் எம்.பி.ஆகிறார் எல்.கே.சுதீஷ்..!
தேமுதிக சார்பில் மாநிலங்களவை வேட்பாளர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார்.
தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் 16ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கால அவகாசம் இன்று (மார்ச் 05) நிறைவடைகிறது. இந்நிலையில், திமுகவுக்கான 4 இடங்களில் ஒரு இடம் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, தேமுதிக சார்பில் மாநிலங்களவை தேர்தலில், அக்கட்சியின் பொருளாளர் LK. சுதீஷ் போட்டியிடுவதாக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
யார் இந்த எல்.கே.சுதீஷ்?
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் தம்பி எல்.கே.சுதீஷ். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள செம்பேடு கிராமம்தான் சுதீஷின் சொந்த ஊர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தவர் சுதீஷ். இவரது அப்பா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அலுவலராகப் பணியாற்றியவர். விஜயகாந்த் நடித்த பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார் சுதீஷ். நடிப்பு ஆர்வம் கொண்டிருந்தார். விஜயகாந்த் ஏற்காததால் நடிப்புத் துறையில் கால்வைக்கவில்லை. பின்னர் விஜயகாந்த் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது தொடங்கி அவருக்குப் பக்கபலமாகச் செயல்பட்டு வந்தார்.
2005-ல் தென்சென்னை மாவட்டத்தின் தலைமைப் பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் எல்.கே.சுதீஷ். 2006 சட்டசபை தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலுக்குப் பின் சுதீஷை இளைஞர் அணி செயலாளராக நியமித்தார் விஜயகாந்த். 2009 லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சியிலும், 2014 லோக்சபா தேர்தலில் சேலத்திலும் போட்டியிட்டார்.
கடந்த 2017-ல் தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டில் மீண்டும் பாஜக கூட்டணியில் தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தேமுதிகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ராஜ்யசபா உறுப்பினராக டெல்லி செல்ல இருக்கிறார் சுதீஷ். கடந்த 2006 முதல் பல்வேறு தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ள சுதீஷ், 2009, 2014, 2019 என 3 மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார். இந்நிலையில், தேமுதிக சார்பில் முதல் ராஜ்யசபா உறுப்பினராக டெல்லிக்குச் செல்ல இருக்கிறார் சுதீஷ்.
தேமுதிகவை கடந்த 2005 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கினார் கேப்டன் விஜயகாந்த். கட்சி தொடங்கி 21 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதுவரை தேமுதிக சார்பில் ஒருவர் கூட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதில்லை. கட்சி தொடங்கிய 6 ஆண்டுகளிலேயே தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்தாலும், இதுவரை நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியவில்லை.

