மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க..! புத்தாண்டு முதல் அமலுக்கு வந்த புது விதிகள்..!
*சமூக வலைத்தளங்களான வாட்ஸ்ஆப், டெலிகிராம், சிக்னல் போன்றவற்றுக்கு சிம் கார்டு வெரிபிகேஷன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த செல்போன் எண்ணைப் பயன்படுத்தியும் எந்த செல்போனிலும் சமூக வலைத்தளங்களை இயக்கலாம். ஆனால், இனி வாட்ஸ்ஆப் போன்றவை அந்த சிம் கார்டு இருக்கும் செல்போனில் மட்டுமே இயங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
* பான் - ஆதார் இணைப்புக்கு நேற்று முன்தினம் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி பான் கார்டு - ஆதார் இணைக்காதவர்களின் பான் கார்டு இனி செயலற்றதாகிவிடும் என்று கூறப்படுகிறது. இதனால் வருமானவரி செலுத்துவது, பெரிய அளவிலான வங்கி பரிமாற்றம் செய்வதில் சிக்கல் எழக்கூடும். எனவே, இணைக்காதவர்கள் அதற்கான அபராதம் செலுத்தி பான் எண்ணை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள்.
* வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோர் 15 நாள்களுக்கு ஒரு முறை அப்டேட் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இதில் சில குளறுபடிகள் நேரிடுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, இனி ஒவ்வொரு வாரமும் கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்யப்படும். எனவே, தவணை செலுத்தாதது, தவணை தாமதமாவது போன்றவை உடனுக்குடன் சிபில் ஸ்கோர் எனப்படும் கிரெடிட் ஸ்கோரில் அப்டேட் செய்யப்படும்.
*2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய விகிதங்களில் மாற்றம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இதுவரை 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலில் இருந்தன. 2025, டிசம்பர் 31ஆம் தேதியுடன் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் நிறைவுக்கு வருகிறது. எனவே, ஜனவரி முதல் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன. இதனால் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பரிந்துரைகளை பொறுத்துதான் எவ்வளவு உயரும் என்று தெரியும்.
* விவசாயிகளுக்கு தற்போது பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது, அதன் சில விதிகள் ஜனவரி 1 முதல் மாறுகின்றன.உதாரணமாக, சில மாநிலங்களில் விவசாயிகளுக்காக பிரத்யேக ஐடி அதாவது அடையாள எண் உருவாக்கப்படும். பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் தொகையைப் பெற இந்த ஐடி-யை வழங்குவது அவசியமாகும்.14 மாநிலங்களில் விவசாயிகள் பதிவுப் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றும், அங்கு புதிய பதிவுகளுக்கு மட்டுமே 'ஃபார்மர் ஐடி' தேவைப்படும் என்றும் சமீபத்தில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ராம்நாத் தாக்கூர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.விவசாயிகள் பதிவுப் பணி தொடங்கப்படாத மாநிலங்களில், விவசாயிகள் ஐடி இல்லாமலும் பதிவு செய்யலாம் என்று அவர் கூறினார்.இது தவிர, 'பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்' (PM Fasal Bima Yojana) கீழ், வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு பெற முடியும். ஆனால் அதில் பாதிப்பு ஏற்பட்ட 72 மணி நேரத்திற்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
*16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடுகள் வரவுள்ளன. பெற்றோர் கண்காணிப்பு (Parental Control) மற்றும் வயது சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கப்படலாம்.
*மாசுபாட்டைக் குறைக்க, பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு முக்கிய நகரங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. குறிப்பாக இ-காமர்ஸ் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் புதிய வாகனங்களைப் பயன்படுத்துவது தொடர்பான விதிகள் மாறக் கூடும்.


